அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வியாழன், 30 டிசம்பர், 2010

மதுரை-திருப்பூவணம் புராணம்

”மணிதிகழ் மாடமலிமது ராபுரி வாழ்சித்தரேந்
துணிவுட னின்னன்பு கேட்டணைந் தோமென்று சொல்லிப் பின்ன
ரணி திகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் றாணிப் பொன்னைப்
பணிவிடைக் கீந்த சொக் தேசி பயகரனே”

இது ரசவாதம் செய்த திருவிளையாடல் புராணம் பற்றி சொல்லும் திருவிளையாடல் பயகர மாலைப்பாடல்(எண்45) ஆகும்.

மதுரை மதுரை சோமசுந்தரக் கடவுள் சித்தராக திருப்பூவணத்தாசியான பொன்னனையாளுக்கு காட்சி தந்து அவளின் ஆசையான திருப்பூவண இறைவனுக்கு திருவுருவம் செய்த காட்சி தான் 36 வது திருவிளையாடல் புராண ஆகும்.



பொன்னனையாள் இறைவனின் கன்னத்தில் கிள்ளி முத்தமிடும் காட்சி


இறைவன் முன் நடனமாடும் சிவபக்தை பொன்னனையாள் , தன் வருமானம் அனைத்தையும் திருப்பூவண நாதரை வணங்க வரும் அனைத்து சிவனடியாருக்கும் அன்னதானம் வழங்கி செலவு செய்தாள்.அதனால் மகிழ்சியும் கொண்டாள் . அவளுக்கு திருப்பூவணக் கோவிலில் பூசிப்பதற்கு தங்கத்தால் ஆன திருவுருவச் சிலை வடித்துக் கொடுக்க ஆசை. ஆனால் , அதற்கான தங்கம் செய்ய காசு இல்லை. வருமானம் எல்லாம் அன்னத்தானத்திற்கே செல்வதால் , என்ன செய்வேன் என மதுரை சோமசுந்தரக் கடவுளை நோக்கி வேண்டினாள்.தியானக் கட்ட முனிவர்களுக்காக திருநடனம் ஆடும் பிரமதாண்டவ நடேசுவரர்




பக்தையின் விருப்பம் அறிந்த சோமசுந்தரரும் , அதனை பூர்த்தி செய்ய , சித்தர் வடிவில் , திருப்பூவணத்தில் பொன்னனையாள் வீட்டிற்கு
எழுந்தருளினார். தாதியர்கள் உணவு உண்ண அழைத்தனர், அப்போது சித்தர் வடிவம் கொண்ட சோமசுந்தரக் கடவுள் பொன்னனையாள் அவர்களை பார்க்க விரும்புவதாக கூறி அழைத்துவரச் செய்தார்.

சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள். உன் முகம் வாடியுள்ளது ஏன்? என சித்தர் வடிவிலுள்ள சிவன் கேட்க , பொன்னனையாளும் தன் விருப்பமான திருப்பூவண நாதனுக்கு பொன்னாலான திருவுருவம் செய்யும் ஆசையைச் சொல்ல, சித்தர் அவளை வாழ்த்தி, அவளிடம் உள்ள அனைத்து உலோகப்பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்து , திருநீற்றினைத் தூவினார். பின் தீயிலிட்டு காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்கும் என்று சொன்னார்.


பொன்னனையாள் செய்த திருவுருவச் சிலை

மீனாட்சியம்மனைப் பிரியாத சோமசுந்தரரை அன்று இரவு தங்கிவிட்டுச் செல்லும் படி கூற, இறைவன் ,”யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம்” என கூறி மறைந்தார். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறியாடும் அம்பலவானரே என்பதைக் கண்டு பக்தியால் நெகிழ்ந்தாள்.

ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குவதைப் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக விளங்கின. அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்கு திருவுருவம் வார்ப்பித்தாள்.

இறைவனின் அழகான திருவுருவ்த்தைக் கண்டு “அச்சோ! அழகிய பிரனோ இவன்” என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது . இத் திருவுருவத்தில் இன்றும் கோயிலில் உள்ள சிலையில் காணலாம்.

மதுரையில் திருவிளையாடல் புராணக் கதைகள் தொடர்பான விழாக்கள் நடைப்பெறும் நாளில், 36 வது ரசவாத புராணக் கதை அன்று சோமசுந்தரக் கடவுள் , திருப்பூவணம் வந்து காட்சி தந்து , மதுரை சென்று வந்துள்ளார். தற்போது அவ்வாறு வருவதில்லை. அவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலே வைத்து நடத்தப்படுகினறன.குறித்த நேரத்திற்கு மீண்டும் மதுரைக் கோவிலுக்கு அழைத்து செல்ல முடியாத்தே , தற்போது இங்கு சோமசுந்தரர் வராமைக்கு காரணமாக சொல்லப்படுகிறது.


வளரும் சந்ததியினருக்கு இவ்வரலாறு மறக்கடிக்கும் முன் திருவிழா அன்று திருப்பூவணம் வந்து செல்ல இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக