அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வியாழன், 23 டிசம்பர், 2010

ஸ்ரீ உமாபதி சிவத்தின் வரலாறு

சைவ உலகில், குரு பரம்பரையான சந்தான குரவர்களாக மெய்க்கண்ட தேவர், அருள் நந்தி சிவம், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகியோரைப் போற்றுவர்.
இவர்களில் உமாபதி சிவம், ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த நடராஜ மூர்த்தியின் உறைவிடமான தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவதரித்தார்.
வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றதோடு மட்டுமில்லாமல் திருக்குறள், பன்னிரு திருமுறைகளையும் கற்ற "பக்த சிகாமணி' இவர். வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லமை பெற்றவராக விளங்கிய உமாபதி சிவாசாரியார், நூல்கள் இயற்றும் ஆற்றலும் உடையவர்.
பதினாறாம் வயதில் இவருடைய திருமணம் நடந்தது. இல்லறம் இனிதே தொடர்ந்தது. அதே சமயத்தில் அவருக்கு வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. எனவே உமாபதி தீட்சிதர், தமக்குரிய பூஜை முறை நாட்களில், தில்லை திருச்சிற்றம்பலத்தானுக்கு பூஜைகள் செய்தார். மற்ற நாட்களில் தனது தந்தை தமக்கு பெட்டகத்துடன் அளித்திருந்த ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜரின் அர்ச்சாவதாரங்களை (விக்கிரகங்களை) பூஜித்து வந்தார்.
இந்நாட்களில் வடமொழி பவுட்கர ஆகமத்துக்கு வடமொழியில் விருத்தியுரை, சிவபரத்துவமான கருத்துக்களோடு ஸ்ரீநடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ""குஞ்சிதாங்கிரி ஸ்தவம்'' என்ற வடமொழி தோத்திர நூல் முதலியவற்றையும் இயற்றினார் உமாபதி. அன்றிருந்த ஜாதிக் கட்டுகளை மீறி, மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை பெற்றார். இதனால் ஊரை விட்டு விலகவும் நேர்ந்தது.
எதனாலும் மனம் தளராதவர் உமாபதி சிவம். இவர் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற பல நூல்களைக் கற்று, மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்றதுடன், அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் ""கொற்றவன்குடி'' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம்.
அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் ""கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்'' எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஉமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு உமாபதி சிவம் நடத்த வேண்டிய பூஜை முறை வந்த ஒரு நாளில், ஸ்ரீ நடராஜமூர்த்தி, தில்லை திருச்சிற்றம்பலத்தில் இருந்து கொற்றவன்குடி மடத்தில், உமாபதி சிவத்தின் பூஜையில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஒரு சந்தர்பத்தில், மார்கழி திருவாதிரை திருவிழாவிற்கான கொடியேற்றத்தின்போது பல முறை தீட்சிதர்கள் முயற்சித்தும் கொடியேறாமல், உமாபதி சிவம் வந்து "கொடிக்கவி' பாடியதும் கொடியேறியது. இவை உமாபதி சிவத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தின!
இவ்வாறு பல இறைப் பணிகளையும், அறப் பணிகளையும் செய்து, பல நூல்களையும் இயற்றி அருள்புரிந்த இம்மகான், ஒரு சித்திரை மாத ஹஸ்த நட்சத்திரத்தில் கொற்றவன்குடி திருமடத்தில் முக்தி பெற்றார்.
"கொற்றவன் குடி' திருமடத்தில் ஸ்ரீ உமாபதி சிவத்தின் குருமூர்த்தம், தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் திருமேனி தாங்கி விளங்குகிறது. மகா மண்டபத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீமுருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ நடராஜர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் பஞ்சலோக உற்சவத் திருமேனியை தரிசனம் செய்யலாம். பிரகாரத்தின் மேற்கில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் தலைமை மாணவராக விளங்கிய "ஸ்ரீஅருள் நமச்சிவாயர்' குரு மூர்த்தம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருவண்ணாமலை துறையூர் ஆதீனம், திருமுதுகுன்றத்தின் (விருத்தாசலம் ஸ்ரீகுமாரதேவர் திருமடம்) கட்டுப்பாட்டில் உள்ள இந்த மடத்தில் நாள்தோறும் நித்திய பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரத்தில் குருபூஜையும், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் மகா குருபூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன. அன்பர்கள் வருகை புரிந்து, தவத்தில் சிறந்த ஸ்ரீ உமாபதி சிவத்தின் அருளைப் பெறலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக