அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வியாழன், 23 டிசம்பர், 2010

அன்பு ஒன்றே சிவமாவது

திருநீலநக்க நாயனார் தம்பதியர் சிவபெருமான் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்கள். நாயனாரின் மனைவி பெருமானைத் தம் குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். இருவரும் தினமும் ஆலயம் சென்று இறைவனை வணங்கிய பின்தான் தமது அன்றாட வேலைகளைச் செய்வார்கள். ஒருநாள் பெருமானை தரிசிக்கச் சென்றார்கள். அது சமயம் சிவலிங்கத்தின் மீது ஒரு சிலந்திப்பூச்சி விழுந்துவிட்டது. அதைக்கண்ட நாயனார் மனைவியின் தாயுள்ளம் பதறியது. லிங்கத்தின்அருகில் சென்று, வாயால் ஊதி அப்பூச்சியை அகற்றினார். இதைக்கண்ட நாயனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. பெருமானின் மீது பட்ட சிலந்திப் பூச்சியை கையால் அகற்றாமல் எச்சில் படுமாறு வாயால் ஊதி அகற்றியது எத்தனை பெரிய அபச்சாரம்? ஏன் இப்படிச்செய்தாய்? என கோபத்துடன் கேட்டார். ஸ்வாமி! வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன்.எம்பெருமானின் திருமேனியில் விழுந்த சிலந்திப் பூச்சியைக் கையால் அகற்ற முயன்றால் அது ஆங்காங்கே ஓடும். அப்போது அது பெருமானின் மேனியில் எரிச்சலை ஏற்படுத்தும். சிலந்தியின் விஷம் மிகக்கொடியது. விஷம்பட்ட இடமெல்லாம் கொப்பளங்கள் வந்துவிடும். அதனால்தான் வாயினால் ஊதி அகற்றினேன். எச்சில்பட்டால் ஒன்றும் தவறு கிடையாது, என்றார் மனைவி. மனைவியின் பதில் அவரைச் சமாதானப்படுத்தவில்லை. என்னதான் இருந்தாலும் அவள் பெருமான் மீது எச்சில்பட வாயால் ஊதியது தவறுதான். இதுமன்னிக்க முடியாத பெரும் தவறு.வேண்டுமென்று தான் வாயால் ஊதினேன் என்று எத்தனை துணிவாகக் கூறுகிறாள்? இனி இவளை மனைவியாக ஏற்கக்கூடாது என்று எண்ணி, அவளைக் கோயிலிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.இறைவன் விட்டவழி என்று எண்ணியபடி நாயனாரின் மனைவி கோயில் மண்டபத்திலேயே புடவைத் தலைப்பை கீழே விரித்துக் கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நாயனாரின் கனவில் பெருமான் தோன்றி, திருநீலா! என்னைப் பார். என் மேனியைப் பார் என்றார். ஆண்டாண்டு காலம் தவம் செய்திருந்தாலும் காண இயலாத ஈஸ்வரனின் திருமேனி எங்கும் கொப்புளங்கள் படிந்திருந்தன.
நாயனார் துடித்தார். ஐயனே! இது என்ன கொப்புளங்கள்? என்று பதற்றத்துடன் கேட்டார். சிலந்திப்பூச்சி என்னைக் கடித்ததால் உண்டான கொப்புளங்கள். இங்கே பார்! உன் மனைவி வாயால் எச்சில்பட ஊதிய இடம் எல்லாம் கொப்புளங்கள் மறைந்திருப்பதைப் பார். தனது எச்சிலால் எனக்கு மருந்திட்ட அன்னையை நீ தண்டித்துவிட்டாய்! சிலந்தி கொட்டியதால் என் உடலில் மட்டும்தான் எரிச்சல். ஆனால், ஆசாரம் என்று கூறி ஒரு உத்தமித் தாயின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவளை வார்த்தையால் கொட்டினாயே! அந்த உன் செயலால் என் உள்ளத்தில் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்க முடியவில்லை, என்று கூறி மறைந்தார். கனவில் ஈசனைக் கண்ட நாயனார் துள்ளி எழுந்தார்.எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேன்? ஆசாரத்தைவிட அன்பே சிறந்தது, பெரியது என்பதை நான் உணரத்தான் எம்பெருமான் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் போலும், என்று புலம்பியபடி கோயில் மண்டபத்திற்குச் சென்று அன்புடன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அன்று முதல் ஆசாரம் பார்க்காமல், ஆசாரத்தை விட்டுவிட்டு அன்பே பெரிதென நினைத்து வாழ்ந்தார்.http://anbhesivan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக