அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வியாழன், 23 டிசம்பர், 2010

திருவாதிரை நோன்பு


ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.இதை ஆருத்ரா தரிசனம் செய்வதற்காக செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப் பெருமானைத் தரிசிக்க முத்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதை]யில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.
ஐதீகக் கதை

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.

சேந்தனார் வரலாறு

சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.

நோன்பு நோற்கப்படும் முறை

மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது. சில சிவாலயங்களில் பகல் திருவிழாவும், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழாவும் அன்று பின் இரவு அதிகாலை வேளையில் நடராஜப் பெருமானுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுப் பத்தாம் நாள் சூரிய உதயத்தில் தரிசனம் நடைபெறும்.

விரதத்தைக் கடைப்பிடிப்போர் திருவாதிரை தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாரணஞ் செய்வர். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.:
"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"

சிவமாகாபுராணத்தில் சங்சரசங்கிதை என்னும் வடமொழி நூலின் உபதேச காண்டத்தில் இந்நோன்பின் மகிமை கூறப்பட்டுள்ளது.திருவாவடுதுறை ஆதீனத்து கச்சியப்ப சிவாசாரியாரின் மாணாக்கராகிய கோனேரியப்ப முதலியார் தமிழில் இதனை மொழிபெயர்த்துள்ளார்.

அகத்தியர் கதை

அகத்தியர் தோற்றம் பற்றி . தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரரின் வீரியம் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்  
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் மீண்டும் வருத்தமுற செய்தார்கள். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே சிவ பிரானை குறித்து பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய
சக்திகளை பெற்றார். இமயத்தில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.வரும் வழியில்
அகத்தியமாமுனிவரை செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை,பின்பு அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவதீட்சை அழித்து பின்பு சில அத்திர சஸ்த்திரகளையும் கொடு த்துள்ளார். அகத்தியர்,சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். சிவனடியாருக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள்
உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி தமிழ் கடவுளாம் முருகக் கடவுளின் ஆணைப்படி “*அகத்தியம்*” என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக்
கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம்
முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.அகத்தியர். ்தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை
ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார்.
*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியம்

15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.

ஸ்ரீ உமாபதி சிவத்தின் வரலாறு

சைவ உலகில், குரு பரம்பரையான சந்தான குரவர்களாக மெய்க்கண்ட தேவர், அருள் நந்தி சிவம், மறைஞான சம்பந்தர் மற்றும் உமாபதி சிவம் ஆகியோரைப் போற்றுவர்.
இவர்களில் உமாபதி சிவம், ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த நடராஜ மூர்த்தியின் உறைவிடமான தில்லையில், தீட்சிதர் மரபில், சம்பு தீட்சிதர் - கௌரி அம்மையார் தம்பதிக்கு கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவதரித்தார்.
வேதங்களையும், சிட்சை, கல்பம், வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம் என்ற ஆறு அங்கங்களையும் கற்றதோடு மட்டுமில்லாமல் திருக்குறள், பன்னிரு திருமுறைகளையும் கற்ற "பக்த சிகாமணி' இவர். வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லமை பெற்றவராக விளங்கிய உமாபதி சிவாசாரியார், நூல்கள் இயற்றும் ஆற்றலும் உடையவர்.
பதினாறாம் வயதில் இவருடைய திருமணம் நடந்தது. இல்லறம் இனிதே தொடர்ந்தது. அதே சமயத்தில் அவருக்கு வைதீக முறையில் தீட்சைகள் செய்விக்கப்பட்டு, ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு பூஜைகள் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. எனவே உமாபதி தீட்சிதர், தமக்குரிய பூஜை முறை நாட்களில், தில்லை திருச்சிற்றம்பலத்தானுக்கு பூஜைகள் செய்தார். மற்ற நாட்களில் தனது தந்தை தமக்கு பெட்டகத்துடன் அளித்திருந்த ஸ்ரீ சிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜரின் அர்ச்சாவதாரங்களை (விக்கிரகங்களை) பூஜித்து வந்தார்.
இந்நாட்களில் வடமொழி பவுட்கர ஆகமத்துக்கு வடமொழியில் விருத்தியுரை, சிவபரத்துவமான கருத்துக்களோடு ஸ்ரீநடராஜர் ஆலய அமைப்பைப் புலப்படுத்துகின்ற ""குஞ்சிதாங்கிரி ஸ்தவம்'' என்ற வடமொழி தோத்திர நூல் முதலியவற்றையும் இயற்றினார் உமாபதி. அன்றிருந்த ஜாதிக் கட்டுகளை மீறி, மறை ஞானசம்பந்தரிடம் ஞான தீட்சை பெற்றார். இதனால் ஊரை விட்டு விலகவும் நேர்ந்தது.
எதனாலும் மனம் தளராதவர் உமாபதி சிவம். இவர் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற பல நூல்களைக் கற்று, மறைஞான சம்பந்தரிடம் சித்தாந்தத் தெளிவு பெற்றதுடன், அவரின் தலைமை மாணவராகவும் உயர்ந்தார். சிதம்பரத்தின் கிழக்கு எல்லையில் ""கொற்றவன்குடி'' என்னும் பகுதியில் தங்கி, சைவ சித்தாந்த நெறிகளைப் பரப்பி வரலானார் உமாபதி சிவம்.
அவரிடம் சித்தாந்தம் பயின்றவர்கள் அவருக்கு திருமடம் கட்டித் தந்து உதவினார். நாளடைவில் இம்மடம் ""கொற்றவன்குடி உமாபதி சிவம் மடம்'' எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஉமாபதி சிவம் குருமூர்த்தம் (கொற்றவன் குடி திருமடம்), சிதம்பரத்தின் கிழக்கில் 1 கி.மீ. தொலைவில், அண்ணாமலை நகர் செல்லும் வழியில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
ஸ்ரீ நடராஜ மூர்த்திக்கு உமாபதி சிவம் நடத்த வேண்டிய பூஜை முறை வந்த ஒரு நாளில், ஸ்ரீ நடராஜமூர்த்தி, தில்லை திருச்சிற்றம்பலத்தில் இருந்து கொற்றவன்குடி மடத்தில், உமாபதி சிவத்தின் பூஜையில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஒரு சந்தர்பத்தில், மார்கழி திருவாதிரை திருவிழாவிற்கான கொடியேற்றத்தின்போது பல முறை தீட்சிதர்கள் முயற்சித்தும் கொடியேறாமல், உமாபதி சிவம் வந்து "கொடிக்கவி' பாடியதும் கொடியேறியது. இவை உமாபதி சிவத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தின!
இவ்வாறு பல இறைப் பணிகளையும், அறப் பணிகளையும் செய்து, பல நூல்களையும் இயற்றி அருள்புரிந்த இம்மகான், ஒரு சித்திரை மாத ஹஸ்த நட்சத்திரத்தில் கொற்றவன்குடி திருமடத்தில் முக்தி பெற்றார்.
"கொற்றவன் குடி' திருமடத்தில் ஸ்ரீ உமாபதி சிவத்தின் குருமூர்த்தம், தட்சிணாமூர்த்தி திருக்கோலத்தில் திருமேனி தாங்கி விளங்குகிறது. மகா மண்டபத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீமுருகப் பெருமான் மற்றும் ஸ்ரீ நடராஜர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் பஞ்சலோக உற்சவத் திருமேனியை தரிசனம் செய்யலாம். பிரகாரத்தின் மேற்கில் ஸ்ரீஉமாபதி சிவத்தின் தலைமை மாணவராக விளங்கிய "ஸ்ரீஅருள் நமச்சிவாயர்' குரு மூர்த்தம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருவண்ணாமலை துறையூர் ஆதீனம், திருமுதுகுன்றத்தின் (விருத்தாசலம் ஸ்ரீகுமாரதேவர் திருமடம்) கட்டுப்பாட்டில் உள்ள இந்த மடத்தில் நாள்தோறும் நித்திய பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நட்சத்திரத்தில் குருபூஜையும், ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் மகா குருபூஜையும் சிறப்பாக நடந்து வருகின்றன. அன்பர்கள் வருகை புரிந்து, தவத்தில் சிறந்த ஸ்ரீ உமாபதி சிவத்தின் அருளைப் பெறலாம்!

அன்பு ஒன்றே சிவமாவது

திருநீலநக்க நாயனார் தம்பதியர் சிவபெருமான் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்கள். நாயனாரின் மனைவி பெருமானைத் தம் குழந்தையாகவே பாவித்து அன்பு செலுத்துபவர். இருவரும் தினமும் ஆலயம் சென்று இறைவனை வணங்கிய பின்தான் தமது அன்றாட வேலைகளைச் செய்வார்கள். ஒருநாள் பெருமானை தரிசிக்கச் சென்றார்கள். அது சமயம் சிவலிங்கத்தின் மீது ஒரு சிலந்திப்பூச்சி விழுந்துவிட்டது. அதைக்கண்ட நாயனார் மனைவியின் தாயுள்ளம் பதறியது. லிங்கத்தின்அருகில் சென்று, வாயால் ஊதி அப்பூச்சியை அகற்றினார். இதைக்கண்ட நாயனாருக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. பெருமானின் மீது பட்ட சிலந்திப் பூச்சியை கையால் அகற்றாமல் எச்சில் படுமாறு வாயால் ஊதி அகற்றியது எத்தனை பெரிய அபச்சாரம்? ஏன் இப்படிச்செய்தாய்? என கோபத்துடன் கேட்டார். ஸ்வாமி! வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன்.எம்பெருமானின் திருமேனியில் விழுந்த சிலந்திப் பூச்சியைக் கையால் அகற்ற முயன்றால் அது ஆங்காங்கே ஓடும். அப்போது அது பெருமானின் மேனியில் எரிச்சலை ஏற்படுத்தும். சிலந்தியின் விஷம் மிகக்கொடியது. விஷம்பட்ட இடமெல்லாம் கொப்பளங்கள் வந்துவிடும். அதனால்தான் வாயினால் ஊதி அகற்றினேன். எச்சில்பட்டால் ஒன்றும் தவறு கிடையாது, என்றார் மனைவி. மனைவியின் பதில் அவரைச் சமாதானப்படுத்தவில்லை. என்னதான் இருந்தாலும் அவள் பெருமான் மீது எச்சில்பட வாயால் ஊதியது தவறுதான். இதுமன்னிக்க முடியாத பெரும் தவறு.வேண்டுமென்று தான் வாயால் ஊதினேன் என்று எத்தனை துணிவாகக் கூறுகிறாள்? இனி இவளை மனைவியாக ஏற்கக்கூடாது என்று எண்ணி, அவளைக் கோயிலிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டார்.இறைவன் விட்டவழி என்று எண்ணியபடி நாயனாரின் மனைவி கோயில் மண்டபத்திலேயே புடவைத் தலைப்பை கீழே விரித்துக் கையை தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துவிட்டார். நாயனாரின் கனவில் பெருமான் தோன்றி, திருநீலா! என்னைப் பார். என் மேனியைப் பார் என்றார். ஆண்டாண்டு காலம் தவம் செய்திருந்தாலும் காண இயலாத ஈஸ்வரனின் திருமேனி எங்கும் கொப்புளங்கள் படிந்திருந்தன.
நாயனார் துடித்தார். ஐயனே! இது என்ன கொப்புளங்கள்? என்று பதற்றத்துடன் கேட்டார். சிலந்திப்பூச்சி என்னைக் கடித்ததால் உண்டான கொப்புளங்கள். இங்கே பார்! உன் மனைவி வாயால் எச்சில்பட ஊதிய இடம் எல்லாம் கொப்புளங்கள் மறைந்திருப்பதைப் பார். தனது எச்சிலால் எனக்கு மருந்திட்ட அன்னையை நீ தண்டித்துவிட்டாய்! சிலந்தி கொட்டியதால் என் உடலில் மட்டும்தான் எரிச்சல். ஆனால், ஆசாரம் என்று கூறி ஒரு உத்தமித் தாயின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவளை வார்த்தையால் கொட்டினாயே! அந்த உன் செயலால் என் உள்ளத்தில் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்க முடியவில்லை, என்று கூறி மறைந்தார். கனவில் ஈசனைக் கண்ட நாயனார் துள்ளி எழுந்தார்.எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேன்? ஆசாரத்தைவிட அன்பே சிறந்தது, பெரியது என்பதை நான் உணரத்தான் எம்பெருமான் இந்நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார் போலும், என்று புலம்பியபடி கோயில் மண்டபத்திற்குச் சென்று அன்புடன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அன்று முதல் ஆசாரம் பார்க்காமல், ஆசாரத்தை விட்டுவிட்டு அன்பே பெரிதென நினைத்து வாழ்ந்தார்.http://anbhesivan.blogspot.com