அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வெள்ளி, 7 ஜனவரி, 2011

ஸ்ரீருத்ராக்ஷ மகிமை

சிவநாமத்தை விரல் விட்டு எண்ணுவதை விட ருத்ராக்ஷமணிகளால் எண்ணுவது விசேஷம். ருத்ராக்ஷத்தின் மகிமை அளவில்லாப் பெருமை பெற்றது. ஈசனுக்கு உகந்தது ருத்ராக்ஷமும், திருவெண்ணீறும் தான்.

ஒரு சுப முஹூர்த்த வேலையில் சதாசிவ மூர்த்தியான திருச்சடைப் பெருமானின் மூன்று திருநேத்ரங்களில் இருந்து கோடிக்கணக்கான சூரியகாந்தியின் பேரொளிப் பிரகாசம் தோன்றியது.

மூன்று கண்களிலிருந்தும் பனி நீர்த் துளிகள் முத்திட்டு தெறித்து வீழ்ந்தன. அன்று ஆறுமுகன் தோன்ற நுதல் விழியினின்று எழுந்தன ஆறு தீப்பொறிகள். இன்று ருத்ராக்ஷம் தோன்ற தண்துளிகள் சிந்தின.

சங்கரன் கண்களில் இருந்து தெறித்து வீழ்ந்த நீர்த்துளிகள் நிலத்தில் வீழ்ந்து ருத்ராக்ஷ விருக்ஷங்களாக மாறின.

அந்த அற்புதத்தைக் கண்டு, தேவர்களும் சிவகணத்தவர்களும், முனிவர்களும், சிவபெருமானின் சேவடிக் கமலங்களைப் போற்றித் துதி செய்தனர்.

லோகக்ஷேமத்துக்காக ஈசன் வித விதமான ருத்ராக்ஷங்களை சிருஷ்டித்துள்ளார். இந்த விருக்ஷங்களில் இருந்து முப்பத்து எட்டு வகையான ருத்ராக்ஷங்கள் தோன்றின.

சிவபெருமானின் வலக்கண்ணாகிய சூரியன் எனப்படும் திருவாயில் இருந்து கபில நிறத்தோடு தோன்றிய நீர்த்துளிகள் பன்னிரண்டு வகையான பேதங்களோடு கூடிய ருத்ராக்ஷங்களாக விளங்கின.

இடக் கண்ணாகிய சந்திரன் எனும் திருவாயில் இருந்து தோன்றிய வெண்ணிறத்தோடு கூடிய நீர்த்துளிகள் பதினாறு வகையான பேதங்களோடு கூடிய ருத்ராக்ஷங்களாக விளங்கின.

ருத்ராக்ஷங்களை அணிபவர் முறைப் படி சிவ பூசை செய்து, ''ஓம் நமசிவய'' எனும் சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓத வேண்டும்.

பலவிதமான ருத்ராக்ஷன்களைப் பற்றி கீழே காணலாம்.ஏகமுக ருத்ராக்ஷம்:

சிவ சொரூபம். இதனை அணிவதால் ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.

இருமுக ருத்ராக்ஷம்:

தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும். இதனை அணிவதால் புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான பாப வினைகள் நீங்குகிறது.

மூன்று முக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ திரேதாக்கினி ஸ்வரூபம். இதனை அணிவதால் ஸ்திரீஹத்தி (பெண்கொலை பாவம்) தோஷ நிவர்த்தி உண்டாகும்.

நான்கு முக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ பிரம்மா ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை அணிவதால் நரஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும்.

ஐந்து முக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ காலாக்னி ருத்ர ஸ்வரூபம்; இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்.

ஆறுமுக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வரூபமானது. ஆறுமுக ருத்ராக்ஷத்தை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஸ்ரீ சுப்பிரமணியர்- ஸ்ரீ விநாயகர் அருள் கிட்டும். இதனை வலது காதில் குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில் அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

ஏழுமுக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ ஆதிசேஷன் ஸ்வரூபம். இதனை அணிவோர்க்கு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும். பெரும் சம்பத்து, ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத் தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள் வாய்க்கும்.

எட்டுமுக ருத்ராக்ஷம்:

இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம். அஷ்ட வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு பலவகையான தோஷங்கள் நீங்குகின்றன.

ஒன்பதுமுக ருத்ராக்ஷம்:

இதனை ஸ்ரீ காலபைரவ ருத்ராக்ஷம் எனவும் கூறுவார். இது சிகப்பு நிறமுடையதாக இருக்கும். இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை. இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ ரூபமாகவே கருதப்படுகிறார்கள். புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.

பத்துமுக ருத்ராக்ஷம்:

இது விஷ்ணு ச்வரூபமாகும். தச திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக விளங்கும் இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும். கிரஹதோஷங்களையும், பூத பேய் பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும் போக்கும்.

பதினோரு முக ருத்ராக்ஷம்:

இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின் ச்வரூபமாகும். இந்த ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும் பதினொரு ருத்ர ஸ்வரூபங்களைக் குறிக்கும். அவை: போலி - பிங்கள - பீம - விரூபாக்ஷ - வியோகித - சாஸ்தா - அஜபாத - அஹிர்புத்தீய - சம்பு - சண்ட - பவ. இதனை சிரசில் தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம் செய்த பலனும் உண்டாகும்.

பன்னிருமுக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ துவாதசாதித்யர் ஸ்வரூபம். இதனை அணிபவருக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவின் ப்ரீதி உண்டாகும். கோமேதகம், அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் உண்டாகும். துஷ்ட மிருகங்களால் துன்பம் ஏற்படாது. இதனைக் காதுகளில் அணிவது விஷேஷ பலனைத் தரும்.

பதின்மூன்றுமுக ருத்ராக்ஷம்:

இந்திர ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீசதாஷிவ ஸ்வரூபம் என்றும் ஸ்ரீ ஷண்முக ஸ்வரூபம் என்றும் கூறுவர். இந்த ருத்ராக்ஷ மாலையை அணிவதால் சர்வ கார்ய சித்தி உண்டாகும்.

பதிநான்குமுக ருத்ராக்ஷம்:

இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீ ருத்ரமூர்த்தி சொரூபம் எனவும், ஸ்ரீஹனுமான் சொரூபம் எனவும் கூறுவர். இது கிடைப்பது மிகவும் அரிது. இந்த ருத்ராக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ அல்லது யார் தரிக்கிரார்களோ அவர

ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம் பகுதி 2

ருத்ராக்ஷம்
-உயிருள்ள ஜடப்பொருள்
இதன் முதல் பகுதியை படிக்க இங்கே சுட்டவும்.

ருத்ராக்ஷம் என்பது ருத்ரனின் ஆக்ஷம் என விளக்குபவர் உண்டு. ஆக்ஷம் என்றால் கண்ணீர் என பொருள்பட சிவனின் கண்ணீர் என ருத்ராக்ஷம் எனும் சொல்லை மொழி பெயர்ப்பார்கள்.சிவன் ஏன் அழவேண்டும்? அவருக்கு என்ன கஷ்டம் வந்தது அழுது கண்ணீர் வடிக்கும் அளவிற்கு, என குழப்பம் கொள்ளும் அளவிற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு அமைந்து விடுகிறது. ருத்ரன் எனும் சிவ அம்சம் அதிக ஆற்றல் வாய்ந்த, வேகமான ஆன்ம உணர்வை ஊட்டும் நிலையாகும். தவநிலையிலிருந்து வெளிப்பட்டவுடன் அதிக வேகமான இயக்க நிலைக்கு சிவன் மாற்றம்மடையும் தன்மை ருத்ராம்சம் என அழைக்கப்படும்.

சூரியனின் மையம் ருத்ரமண்டலம் என அழைக்கப்படுவதை கொண்டு ருத்ராம்சம் என்பது எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என பொருள்கொள்ளலாம். ருத்ரநிலையில் தனது புருவ மத்தியில் உள்ள மூன்றாம் கண்ணை திறக்கும் பொழுது வெளிப்பட்டஆற்றல் திண்ம வடிவில் மாற்றம் அடைவதே ருத்ராக்ஷம் என அழைக்கிறோம்.

ஆக்ஷம் என்ற சொல்லுக்கு " கண்ணிலிருந்து வெளிப்படுவது" என்றும்பொருள்கொள்ளமுடியும். ருத்ரனின் நெற்றி கண்ணிலிருந்து உதிரும் பொருள் என சரியாக மொழி பெயர்க்க வேண்டும். இதன் மூலம் சூரியனுக்கு ஒப்பான ஆற்றல் கொண்டது ருத்ராக்ஷம் என்றும் மனதில் கொள்ளவேண்டும். சூரியன் எவ்வாறு தன்னுடைய ஆற்றல் மூலம் சூரிய மண்டலத்தை உருவக்கியதோ அது போல ருத்ராக்ஷம் தனது ஆற்றல் மூலம் அதன் சூழ்நிலை முழுவதும் கட்டுப்பட்டில் வைக்கும் சக்தி கொண்டது.

ருத்ராக்ஷத்திற்கு என சில இயல்பு குணங்கள் உண்டு. சக்தியூட்டப்பட்ட ருத்ராக்ஷம் அணிந்திருப்பவர்களை மிருகம் மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டாது என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட உண்மை. இதனால்தான் காடுகளில் தவம்செய்ய செல்லும் ரிஷிகள் தங்களின் உடல் முழுவதும் ருத்ராக்ஷத்தை அணிந்தார்கள்.

ருத்ராக்ஷம் என்பது நமக்கு நிகரான ஒர் உயிரின் வடிவம் என அறிந்து கொள்வது அவசியம்.நீங்கள் ருத்ராக்ஷத்தை தொடர்ந்து அணிபவராக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் சுக-துக்கங்களின் வெளிப்பாடு ருத்ராக்ஷத்திலும் தெரியும். உங்களின் உடலில் அதிகமான உடலுக்கு ஒத்துக்கொள்ளாத வேதிப்பொருட்கள் இருந்தால் ருத்ராக்ஷம் தனது இயல்பு நிறத்தை மற்றிக்கொள்ளும். விஷபொருட்கள் உடலில் கலந்தால் ருத்ராக்ஷம் அந்த விஷப்பொருட்களைப் பிரித்தெடுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வகையில் உடைந்து விடுவதை எனது அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

தியான நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும முறையில் ஆற்றலை கடத்துதல், அவர்களின் ஆன்மாவுடன் உரையாடுதல் என ருத்ராக்ஷம் ஒர் உயிராகவே செயல்படும். 108 மணிகள் கொண்ட ருத்ராக்ஷ மாலை அணிந்து வலம் வருபவர் ஒரு கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உலா வருவதற்கு சமமான செயலை செய்கிறார் என்பதை உணரவேண்டும்.

ருத்ராக்ஷம் பயன்படுத்த எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. குறிப்பிட்ட ஜாதி, மத, இன வேறுபாடு கிடையாது. ஆண்/பெண் என இருவரும் பயன்படுத்தலாம். வயது மற்றும் இதர விசயங்கள் தடையாக இருக்காது. ஆனால் ஒழுக்கமும் தூய்மையும் ருத்ராக்ஷத்திற்கு முக்கியமான ஒன்று.


தூய்மையற்ற நிலையிலும் ஒழுக்கமற்ற நிலையிலும் பயன்படுத்தும் பொழுது ருத்ராக்ஷத்தின் இயல்பு நிலையான தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும் தெய்வீகமான ஒர் பொருளை எவ்வாறு பாதுகாப்போமோ அதற்குண்டான மரியாதை செலுத்துவது நல்லது.

எனக்கு தெரிந்த ஓர் சினிமா நடிகர் ருத்ராக்ஷத்தை தவறாக ஃஷேன் ஷோவில் பயன்படித்தினார். அதுவரை சிறப்பாக இருந்த அவரின் வெற்றிகள் தடம்மாற துவங்கின. அதனால் ருத்ராக்ஷம் பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை.

குரு தீஷை பெற்றவர்கள் தினமும் ஜெபம் செய்த பிறகு ருத்ராக்ஷ மாலையை கழுத்தில் அணிவது நல்லது.ஜெபிக்கப்பட்ட மந்திரமானது ருத்ரக்ஷ மாலையில் தொடர்ந்து அதிர்வுகளை உண்டு பண்ணி அன்ரு முழுவதும் அவர்களை ஆனந்திக்கச் செய்யும்.

மந்திர ஜெபம் செய்யாதவர்கள் கூட ஆன்மீக ஆற்றல் வாய்ந்தவர்களிடத்தில் பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்ளலாம். இதை தவிர வேறு தன்மையில் ருத்ராக்ஷம் அணிந்தால் அது ஓர் சாதாரண அணிகலனுக்குச் சமமானது. வேரு விசேஷம் அதில் இல்லை.

ருத்ராக்ஷ மாலையை பயன்படுத்தும் பொழுது நன்றாக பாதுகாப்பது முக்கியமான ஒன்று.
பயன்படுத்த துவங்குவதற்கு முன்னால் ஒரு வார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணையில் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரால் கழுவி ஈரம் போக துடைத்து விட்டு திருநீறில் ஒரு நாள் முழுவதும் வைக்கவேண்டும். பின்பு காய்ச்சாத பசும்பாலில் கழுவி நீரில் முக்கி எடுத்து நன்றாக துடைத்துக் கொள்ளவும். பின்பு பூஜையில் வைத்து ஜெபங்கள் செய்து அணியலாம். இந்த தூய்மையாக்கும் முறையை வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். மாத சிவராத்திரி அல்லது மஹாசிவராத்திரி அன்று அணியுமாறு தூய்மை வேலையை துவக்க வேண்டும்.


ருத்ரக்ஷத்தை தூய்மை செய்ய இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்ற மனநிலை ஏற்படுகிறதா? இதை செய்ய வேண்டிய அவசியத்தை நிதர்சனமான விஷயத்திலிருந்து பார்ப்போம். உங்கள் உடலில் மேல்தோல் முழுவதும் இல்லாமல் வெறும் சதைப்பகுதி மட்டும் வெளியே தெரிந்தால் உங்கள் உடல் எவ்வளவு உணர்வு மயமாக இருக்கும். இதற்கு ஒப்பானது ருத்ராக்ஷத்தின் உணர்வு நிலை. அதனால் தான் மேற்பகுதியை கடினமாக்கவும், உணர்வு மிகாமல் சரியான நிலையை அடைய இயற்கையான பொருள் மூலம் சுத்திகரிக்க முயல்கிறோம்.

ருத்ராக்ஷ மணிகளில் பல வகைகள் உண்டு. ஒன்று முதல் பதினான்கு முகங்கள் வரை ருத்ராக்ஷ மணிகள் கிடைக்கிறது. முகம் என்பது ருத்ரக்ஷ மணிகள் மேல் உள்ள செங்குத்தான கோடுகள் ஆகும். ஆரஞ்சு பழத்தை தோல் உரித்தால் உள் பகுதியில் ஒவ்வொரு சுளைக்கும் இடையே தெரிவது போல உள்ள பகுதியை முகம் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு முக தன்மைக்கு ஏற்ப ருத்ராக்ஷம் ஆற்றலை வேறுபடுத்துகிறது என்றும் அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் வேறுபடுகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மையில் ருத்ராக்ஷத்திற்கு பலன் தருவது, செல்வம் கொடுப்பது போன்ற செயல் கிடையாது.நவரத்தின கல் போல இதனையும் வியாபாரமாக்கும் யுக்தியே இந்த பிரச்சாரம்.

ருத்ரக்ஷத்தை தங்கம், தாமிரம் அல்லது பருத்தி நூலில் மாலையாக அணிவது நல்லது. நூலில் அணியும் பொழுது மட்டும் நெருக்கமாக கோர்த்து அணிய வேண்டும். ருத்ரக்ஷ வடிவங்களுக்கு என்று சில முக்கிய செயல்கள் உண்டு. இந்த ஒவ்வொரு வகையான ருத்ரக்ஷமும் அடிப்படையில் ஒன்றான செயல்களை செய்தாலும், சில பிரத்யேக காரணங்களுக்கும் பயன்படுத்தலாம்.

1. ஐந்து முக ருத்ராக்ஷத்தை மட்டுமே (கிரஹஸ்தர்கள்) குடும்ப வாழ்க்கையில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

2. ஏக முகி என அழைக்கப்படும் ஒருமுக ருத்ராக்ஷம் சன்யாசிகள் மட்டுமே அணியவேண்டும். பிறர் வீட்டில் உள்ள சாலிக்ராமம் மற்றும் விக்ரஹம் போல வைத்து பூஜை செய்யலாம்.

3. நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்தினால் கலை நயம், சங்கீத ஞானம் போன்ற கலையாற்றல் வளரும். குழந்தை பிறப்பு இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு நான்கு முக ருத்ராக்ஷத்தை பயன்படுத்துவதால் தடை நீங்க வாய்ப்பு உண்டு.

4. துடிப்பு இல்லாமல் சோர்வுடன் இருக்கும் பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆறுமுக (ஷண்முகி) ருத்ராட்சம் நல்ல பலனை அளிக்கும்.

5. மணவாழ்க்கையில் வாழ்க்கைத் துணைவருடன் பிரிவு உள்ளவர்கள் கௌரி சங்கர் என்ற ருத்ராட்ச வகையை அணிந்தால் மண வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு.

தனியாக ஒரே ஒரு ருத்ராக்ஷம் அணிவதை விட மணிமாலையாக அணிவது நல்லது. பஞ்சமுக ருத்ராக்ஷத்தை தவிர வேறு வகையான ருத்ராக்ஷம் அரிது. எனவே நமது பஞ்ச ப்ராணன்களில் சக்தி நிலை மேம்பட 108 மணிகள் கொண்ட ஐந்துமுக ருத்ராக்ஷத்தை அணிந்தால் அனைத்து மேம்பாட்டையும் பெறலாம்.

ருத்ராக்ஷத்தில் போலியான மணிகள் வருவதுண்டு. இதை எவ்வாறு கண்டறிவது என குழப்பம் அனைவருக்கும் உண்டு. ருத்ராக்ஷம் தனக்கெனசில தனித் தன்மைகளைக் கொண்டது. தாவர வகையாக இருந்தாலும் நீரில் மூழ்கிவிடும். மரவகைகள் நீரில் மிதப்பதைப் போல மிதக்காது. ருத்ராக்ஷத்தில் செயற்கையாக எதையும் இணைக்க முடியாது.

ருத்ராக்ஷ மணியின் துளைகளுக்கு அருகே செப்பு நாணயங்களை வைத்தால் ருத்ராக்ஷம் காந்தப்புலம் விலகுவதை போல வேறு திசைக்கு மாற்றமடையும். ருத்ராக்ஷம் போன்ற உருவத்தில் இருக்கும் சில மரவகைகள் உண்டு. இதை" பத்ராட்சம் " என அழைப்பார்கள். இதில் சாயத்தைக் கொடுத்து ருத்ராக்ஷம் போல விற்பனை செய்வார்கள். தகுந்த பரிசோதனைக்குப் பிறகு வாங்குவது நல்லது.

ஜோதிட ரீதியாக ருத்ராக்ஷம் பயன்படுமா என்றால் முடியும் என்றே கூறலாம். ஒருமுக ருத்ராக்ஷம் முதல் அதன் வரிசைகிரமமாக உள்ள முக அமைப்புகள் சூரியன் முதல் சனி வரை உள்ள வானியல் அடிப்படையான கிரக வரிசைக்கு சமமானவை. எந்த கிரகத்தின் ஆற்றல் தேவையோ அந்த கிரகத்தின் அமைப்பு கொண்ட ருத்ராக்ஷத்தில் கிரகத்தின் மூலமந்திரத்தை ஜெபம் செய்து அணியலாம்.

ருத்ராக்ஷத்தை பல லட்ச ரூபாய் விலையில் விற்கவும் வாங்கவும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். பல கோடி ரூபாய் செல்வம் சேர ருத்ராக்ஷம் அணியுங்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு உடல் முழுவதும் ருத்ராக்ஷம் அணியும் எந்த சிவனடியாரும் கோடிஸ்வரராக இருந்து பார்த்ததில்லை. பிறருக்கு கோடிகளை அளிக்கும் ருத்ராக்ஷத்தை விற்கும் வியாபாரி ஏன் கோடீஸ்வரன் ஆவதில்லை என சிந்தித்துப் பார்த்தால் நிதர்சனம் புரியும்.

ருத்ராக்ஷத்தைக் கொண்டு கோடீஸ்வரனாக முடியாது. ஆனால் அண்டத்தைப் படைத்த ஈஸ்வரனாக முடியும். லஷ்மியை அடைய முடியாவிட்டாலும் ஆன்ம லஷியத்தை அடையமுடியும். பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.
ருத்ராக்ஷம்
-உயிருள்ள ஜடப்பொருள்

உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது. இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இரு பரிமாணங்களில் செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்கு மூலமாக அமைந்துள்ளது. வேதாந்தம் இதையே புருஷத்துவம் மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறது. இருவகையன செயல் அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்கு தெரியாது. வேதாந்த உண்மையான இந்த இரு செயல்களை புரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளை புரிந்துகொள்ளமுடியும்.


இயற்கையின் தன்மை சாஸ்வதமானது. இயற்கை என்பது உருவக்கப்பட்டது அல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது, இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும் என்பதயே குறிக்கும். ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும், இது தற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம் புருஷத்துவமே ஆகும்.



அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம் கண்டுபிடித்தது என்பதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு என கூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள், வடிவம் மற்றும் தன்மை இயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதை அறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் என கூறலாம். ஆனால் இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால் இயங்கிவருகிறது என கூறுவார்கள். முக்குணத்தை (தோஷங்கள்) வாத, பித்த, கப குணம் சொல்லுவதை கேள்விப்பட்டுள்ளோம். இந்த இயற்கையன மூன்று குணங்கள் மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாக ஆயுர்வேத சாஸ்திரம் கூருகிறது. மனித உடலில் தோஷத்தில் ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.

இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது) என்றும் மனித உடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள் ப்ரகிருதித்துவம் (செயற்கையானது) என்றும் வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்த சாரமான புருஷ, ப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கான சான்றை விளக்கியுள்ளேன்.

நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என பார்ப்போம். மனித உடல் என்பது இயற்கை யின் படைப்பு, இதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும் பெண்ணும் இணைந்து உருவாக்கும் பொழுது புருஷத்துவம் கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறது. நமது இயற்கையான (புருஷார்த்த) குணம் என ஒன்று உண்டு. ஆனால் சமூக நடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள் ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத் தன்மையை சாரும். நான் கூறும் இது போன்ற உதாரணங்களால் புருஷத்துவம் மேலானது ப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது. புருஷத்துவமும், பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமே வாழ்வியல் சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையான புருஷத்துவமே மூலம் என கூருகிறார்கள். புருஷத்துவமே அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரமானது என்பது அனைத்து மதத்தின் விளக்கம். அதனால் தான் சில மதங்கள் ஒரே கடவுள் எனும் கொள்கையை கொண்டுள்ளது. பாரதத்தில் தோன்றிய மதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையான இறை நிலை என ப்ரகடனப்படுத்தியது. புருஷ நிலையை சிவன் என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும் விளக்கினார்கள். சிவன் ஆண் தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க காரணம் சிவநிலை என்பது அசைவற்றது, சக்திநிலை என்பது அசையக்கூடியது.(இயங்கும் தன்மை) என்ற வேறுபாட்டால் தான்.

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்) என வகைப்படுத்தினார்கள். இயற்கையில் செயற்கை தன்மையும், செயற்கையில் இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன் கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும். இத்தத்துவத்தின் அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் அமைந்துள்ளன. பருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம், இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல் என்பது செயற்கையான செயல்பாடு.

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும் ஆடையும், ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பது சிவசக்தி நிலையை குறிக்கும். இதனால்தான் சக்தி வழிபாடு செய்பவர்கள் அதிக ஆடை அணிகலன் அணிவதும், இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன் நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும் பொருட்களை கவனித்தால் சங்கு, ஜடாமுடி, மண்டை ஓடு, ருத்ராஷம்,மிருக தோல் அனைத்தும் இயற்கையாக கிடைத்த பொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாது. சில பொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும். ப்ரபஞ்சத்தின் படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்து துவங்குகிறது. புருஷ தன்மை என்பது இயக்கமற்றது. புருஷத் தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லை. பிரகிருதிக்கு கால பரிமணமும் உண்டு. பிறந்த குழந்தை புருஷ தன்மையில் தேச, கால வித்யாசம் இன்றி இருக்கிறது. வளர்ந்த மனிதன் புருஷ நிலையில் இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள் கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும் புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம், தியானம் மற்றும் யோகம் எனும் ஆன்மீக வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலை எனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையன பொருட்கள் உதவுகிறது. இயற்கை பொருட்கள் மூலம் மனிதன் தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும் பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும் ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.


சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாக அனைவரும் நம்புகிறார்கள். ஆனால் சனாதான தர்மம் என அழைக்கப்படும் பாரத தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும் ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டு. குறிப்பாக ருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டு. பிற ஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறைய முரண்பாடான தகவல்கள் உலவுகிறது. தெரியவேண்டிய விஷயம் மறைக்கப்பட்டும், தேவையற்ற விஷயங்கள் உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தை உண்டு செய்கிறது. இந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயே ஏற்பட்டது.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை) கனி வடிவம் பெருவதில்லை. அத்தி பூக்காது விதை அளிப்பது போல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும் மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில் இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாக திகழ்கிறது. இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம் கிடைப்பதில்லை. மேலும் ருத்ராஷத்தை பயிர் செய்து விளைவிக்க முடியாது. ருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில் வளர்க்கும் பொழுது இயல்பான வளர்சியையோ, ருத்ராஷத்தின் வடிவத்தையோ பெறுவதில்லை. நேபாள தேசத்தில் பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூட அதை ஒரு இயற்கையான வன பகுதியாக வைத்திருக்கிறார்கள். நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம், அதில் உள்ள துளை அனைத்தும் இயற்கையானது. பார்க்கும்பொழுது எந்த வித செயல்படும் இல்லாத பொருளாக தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள் புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்று. சாதாரண ஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் என எதிர்வாதம் செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால் இணைக்கப்பட்ட கணிப்பொறியின் சில்லு(Chip) வேலை செய்வதையும், உலகின் பல கிலோ மீட்டர் தூரம் இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ள செய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டு. உயிரற்ற மணல் இது போன்ற செயலை செய்யும்பொழுது உயிருள்ள தாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக செயல்களை செய்ய முடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அது வேலை செய்யாது. அதற்கு தேவையான இணைப்புகள், மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால் அவர்கள் அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள். அது போல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்து, ஆன்மீக ஆற்றல் கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால் அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகி உங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.

அப்படி பட்ட ருத்ராஷத்தை பற்றி சிறிது விரிவாக காண்போம்.
வாங்க விரதம் இருக்கலாம்

ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.

நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும்.

விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம்.

பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம்.

உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும்.

காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது.
உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.

பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.

துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.

பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.

விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.

சதுர்த்தி,சஷ்டி,ஏகாதசி,பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.

நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம்.

நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும்.

சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?

• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு.

மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும். மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்‌ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.

மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும்.

விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும்.

ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.

நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமன்
நிரந்தரமாக வசம் செய்வார்.

சுபவரம் ஆன்மீக இதழில் ஜூன் மாதம் வந்த கட்டுரை.

வியாழன், 6 ஜனவரி, 2011

எறிபத்த நாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்
என்று வழங்குகின்ற
பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது


இரண்டாவது இலைமலிந்த சருக்கம்
எறிபத்த நாயனார் புராணம்

திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்
சிவகாமி யார்மலரைச் சிறந்த யானை
யானெறியோ நெறிபத்தர் பாக ரோடு
மறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று
புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்
புரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்
கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்
கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.


கொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவாபத்துக்குக் காரணராயிருந்தவர்களை மழுவினால் வெட்டுகின்றவருமாகிய எறிபத்தநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.
அவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவரும் தினந்தோறும் புஷ்பங்கொய்து திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார்.

ஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்து போய், ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, திருநந்தவனத்துக்குப் போய், புஷ்பங்களை அலருஞ்சமயத்திலே கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அந்நகரிலிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனாருடைய பட்டவர்த்தன யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மேலேறிய பாகர்களோடும் ஒருவீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின்றொடர்ந்தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது, அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக; சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகாகதி கொண்டு சென்றது.
சிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவராகி தவறிவிழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதிதுக்கங் கொண்டு "தேவரீருக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா" என்று சொல்லி ஓலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி "உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது" என்று கேட்க, அவர் "சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது" என்றார்.
உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு அதிசீக்கிரம் ஓடிப் போய் யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.

அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, "பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று போட்டார்கள்; இதை மகாராஜாவுக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.

உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடந்தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, "யானையைக் கொன்றவர் யாவர்" என்று கேட்டார்.

பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, "மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்" என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் "இவர் சிவபத்தராகையால் அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ்செய்தது போலும்" என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, "இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினாலே இவருக்கு யாதொரு அபாயம் சம்பவியாமல் இருக்கும்படி பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ" என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்" என்றார்.

எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, "சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்" என்றார். புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, "சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது. அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று" என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, 'இதினாலே கொன்றருளும்" என்று நீட்டினார்.

எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. "இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்" என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, "பட்டவர்த்தன யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே" என்று எண்ணி "முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு" என்று நினைத்து, அந்தவாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.

அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, "அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்" என்று ஓரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுந்தது.

உடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். புகழ்ச்சோழநாயனாரும் அந்தவாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார், பாகர்கள் பட்டவர்த்தனயானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள்.

எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, "அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்" என்று விண்ணப்பஞ் செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவராயினார்.

திருச்சிற்றம்பலம்
பின்னிணைப்பு:
எறிபத்த நாயனார் புராண சூசனம்

சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்

சைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; "தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்," எ-ம். "அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு." எ-ம் வரும்.
களவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ;
அது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இக்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.
இச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வெளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும். 
                                                                                திருச்சிற்றம்பலம்

அதிபத்தநாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம்
என்று வழங்குகின்ற
பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது


ஏழாவதுபொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்

அதிபத்தநாயனார் புராணம்


அலையாருங் கடனாகை நகருள் வாழு
மதிபத்தர் பரதவர்க ளதிபர் வேலை
வலைவாரி வருமீனிற் றலைமீ னீசன்
வார்கழற்கே யென்றுவிடு மரபார் பன்னாட்
டலையான தொருமீனே சார நாளுந்
தந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொ
னிலையாரு மணிநயத்த மீனொன் றெய்த
நீத்தருளா லிறைவனடி நேர்ந்து ளாரே.

சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார்.

இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.

இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு,

"இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள;

அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

இளையான்குடிமாற நாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம்
என்று வழங்குகின்ற
பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது



முதலாவதுதில்லைவாழந்தணர் சருக்கம்
இளையான்குடிமாற நாயனார் புராணம்


இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே
மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்
வறுமையா லுணவுமிக மறந்து வைகி
யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி
யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்
செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்
சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து
பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்
பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

ளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார்.

இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார்.
அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாற நாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார்.
அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.
அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகல்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, "இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்" என்றார்.
அதற்கு மனைவியார் "வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்" என்று சொல்லி, பின்பு "இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்" என்று சொல்லித் துக்கித்தார்.
இந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார்.
அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, "அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே" என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார்.
மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, "இனிக் கறிக்கு யாதுசெய்வோம்" என்றார், உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, "சைவரை அமுதுசெய்விப்போம்" என்று சொன்னார்.
நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, "சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்" என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, "அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு" என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.


திருச்சிற்றம்பலம்
இளையான்குடி மாற நாயனார் புராண சூசனம்
மாகேசுர பூசை

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம்.
மாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, "சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்" என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம்.
சிவதருமோத்தரம், "புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச - மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." என்றும்
பிரமோத்தரகாண்டம், "எள்ளற் படுகீழ் மக்களெனு மிழிந்த குலத்தோ ரானாலும் - வள்ளற் பரமன் றிருநீறு மணியு மணிந்த மாணிபினரை - யுள்ளத் துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே - கொள்ளத்தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார்." என்றும்
சைவசமயநெறி, "தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு - மீசனென வேயுளத்துளெண்" என்றும் வரும்.

இம் மாகேசுர பூசையிற் சிறந்த புண்ணியம் பிறிது இல்லை.
அது, "அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்து - ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று - ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை - யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்" என்னுந் திருவிளையாடற் புராணத்தினாலும்,
"படமாடக் கோயிற் பரமற் கொன்றீயி - னடமாடுங் கோயி னம்பற்கங் காகா - நடமாடுங் கோயி னம்பற்கொன் றீயிற் - படமாடுங் கோயிற் பரமற்கங் காமே." என்றும்
"தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந் - துண்டது மூன்று புவனமு முண்டது - கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் - றெண்டிசை நந்தி யெடுத்திசைத்தானே." என்றும்
"அகர மாயிர மந்தணர்க் கீயிலென் - சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் - பரம யோகி பகலூண் பலத்துக்கு - நிகரில்லை யென்பது நிச்சயந் தானே." என்றும்
"ஆறிடு வேள்வி யருமறை நூலவர் - கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதி - னீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலே - பேறெனி லோர்பிடி பேறது வாகுமே" என்னுந் திருமந்திரத்தினாலும்,
"மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் - கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா - னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் - கட்டிஇடல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்னுந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும்,
சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை; பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுரதருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை" என்னும் அருணாசல மான்மியத்தினாலும் அறிக. இல்வாழ்க்கையின் பயன் இம்மாகேசுர பூசையேயாம் அது, "மறமலியுலக வாழ்க்கையே வேண்டும் வந்துநின்னன்பர்தம் பணியா - மறமது கிடைக்கின்" என்னும் தாயுமான சுவாமி வாக்கால் அறிக.
இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய மாகேசுரபூசையை, எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால், பெருஞ் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். இவர் விதிவழுவாதே மாகேசுரபூசை செய்தனர் என்பது, இங்கே "ஆர மென்பு புனைந்த வையர்த மன்பர்" என்னுந் திருவிருத்தத்தினாலும், "கொண்டு வந்து மனைப்பு குந்து" என்னுந் திருவிருத்தத்தினாலும் உணர்த்தப்பட்டது.
இம்மாகேசுர பூசையை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை இவ்வளவு என்று சொல்லக்கூடாத பெரும் வியப்பைத் தருகின்றது! இவருக்கு வந்த வறுமையின் கொடுமையோ மிகப் பெரியது. அது, இங்கே "இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பிரானிளை யான்குடி - மன்னன் மாறன் மனஞ்சு ருங்குதலின்றி யுள்ளன மாறியுந் - தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுபின் - முன்னை மாறி றிருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்" என்று உணர்த்தப்பட்டது. மாகேசுர பூசை செய்தலினாலே தமது எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து இவ்வளவு மிகக் கொடிய வறுமை வந்து எய்திய பொழுதும், இவர் புண்ணியம் செய்த நமக்குக் கடவுள் இவ்வளவு இடர் செய்தாரே என்று சிவனைச் சிறிதும் நோவாமை எவ்வளவு ஆச்சரியம்! நோவாமை மாத்திரத்தில் நில்லாது நாம் சிவபுண்ணியத்தைச் செல்வம் உள்ளவழிச் செய்யாமையே குற்றம். வறுமை யெய்தியவழி நாம் யாது செய்வோம்! இப்போது செய்யாமை குற்றம் அன்றே என்று, ஒழியாது செய்தமை அதினும் ஆச்சரியமன்றோ! இன்னும், இவரும், இவர் கருத்தோடு சிறிதும் மாறுபாடின்றி ஒழுகும் இவர் மனைவியாரும், தாங்கள் பகல் முழுதும் போசனஞ் செய்யாமையாற் பசி மிகுந்து வருத்தமுறும் நேரத்தினும், பேரிருளென்பதும் பெருமழை யென்பதும் பாராமல் செய்த செயற்கருஞ் செய்கை, அதினும் ஆச்சரியமன்றோ! தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், சர்வான் மாக்களும் உணர்ந்து உய்யும்பொருட்டு, பரமசிவன் இவர்களுக்கு வறுமையைக் கொடுத்து, இவர்கள் செயற்கருஞ் செய்கையை வெளிப்படுத்தி, இவர்கட்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையை யாவர் அளக்கவல்லர்! மெய்யுணர்வுடையோர் தமக்கு எத்துணை இடர்வரினும், சிவனிடத்து அன்பு குன்றார் என்பது இதனால் அறிக. காரைக்காலம்மையாரும் "இடர்களை யாரேனு மெனக்கிரங்காரேனும் - படரு நெறிபணியாரேனுஞ் சுடருருவி - லென்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் - கன்பறா தென்னெஞ் சவர்க்கு." என்று திருவாய் மலர்ந்தருளினார்.

முதலாவது தில்லைவாழந்தணர் சருக்கம் முற்றுப்பெற்றது

அரிவாட்டாயநாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது
இரண்டாவது இலைமலிந்த சருக்கம்
அரிவாட்டாயநாயனார் புராணம்
தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்
தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்
றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்
துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை
யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த
வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே
மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி
வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.
சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார்.
இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.
செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.
இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.
இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது" என்று துக்கித்து, "இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார்.
அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலி செய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் "இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று. "
திருச்சிற்றம்பலம்
இரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.
பின்னிணைப்பு:

அரிவாட்டாய நாயனார் புராண சூசனம்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல் மிக்க மேலாகிய சிவபுண்ணியமாம். அது, "அருத்திய வவிழி னேக மமலனை முதலோர்க் கன்பா - லிருத்திடுஞ் சிவலோ கத்தில் வருடமா யிரமு மேயப் - பொருந்தியவன்பர் தம்மைப் பொருந்திடிற் பருப்பு நெய்யு - முரைத்த வவ் வருடந் தன்னிற் றசகுண மோங்கு மாங்கே", "பொறித்தநற் கறியும் புல்கிற் றசதச குணிதம் போனந் - தரித்தசாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் - பரித்தநற் கந்த பந்தஞ் சதசத குணமும்பற்று - மிரத்தநற் சாலி யன்ன மயுதமே யெண்ணி லென்றும்." "சாலியின் விசிட்ட ராச சாலியாற் சமைத்த வன்ன - மேலைய பலத்தின் மிக்க தசகுணம் விளைக்கு மீண்டுங் - கோலிய பலங்களேறுங் கொழுவிய நெய்யுங் கூடி - லேலவே கறியுங் கூடிலேற்றமுன் னிசைத்த வாறாம்" என்று சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால் அறிக. இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வ மெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும்; கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் சீவனம் செய்து வரும் நாளிலே; அச்சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைப்ப, இது அடியேன் செய்த புண்ணியம் என்று, அவை எல்லாம் சிவனுக்கே அமுது செய்விப்பாராகி, தாம் இலைக்கறி உண்டு கொண்டு இருந்த பெருந்தகைமை, நினையுந்தோறும் எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகின்றது! இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ! இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது! இவர்தாம் இன்ப துன்பம் அடைதல், தமக்கு இச்சிவபுண்ணியம் செய்யக் கிடைத்தல் கிடையாமைகளாலன்றி, செல்வ வறுமைகளால் அன்று என்பது ஈண்டும் கூறியவாற்றாற் காண்க.

இந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது. இப்பெருந்தன்மை, "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எ-ம். "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்". எ-ம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார். ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா! அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ! அரிது அன்றே! இது "பரமன் றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற் - றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.

திருச்சிற்றம்பலம்

ஆனாயநாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

கத்தியரூபமாக செய்தது
இரண்டாவது
இலைமலிந்த சருக்கம்
ஆனாயநாயனார் புராணம்
மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்
மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்
கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து
குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்
தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்
தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து
பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்
போதுகவென் றருளவுடன் போயி னாரே.

ழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.
கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன.
இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,
அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து, "மெய்யன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்" என்று திருவாய்மலர்ந்தருளி, அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.
இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.
பின்னிணைப்பு:
அனாயநாயனார் புராண சூசனம்

ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்தல்
அநாதி தொடங்கித் தம்மை வருத்தும் பிறவி நோயினின்றும் நீங்கி உய்ய விரும்புவோர்க்கு, அந்நோயை நீக்க வல்ல பரம வைத்தியராகிய சிவனை, உணர்த்தும் மந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரமேயாம். ஆதலால், இப்பஞ்சாக்ஷரத்தை, சிவன்மாட்டு இடையறாது வளரும் மெய்யன்பினால் மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர். "காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி - யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது - வேத நான்கினு மெய்ப்பொருளாவது - நாத னாம நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
சிவநாமத்தை வாளா ஓதலினும், இசை நூற்பயிற்சியின் மிக வல்லராகி, ஏழிசைகளின் முறை வழுவாது முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்தினோடும் வேய்ங்குழலால் வாசித்தல், தமக்கும் அதனைக் கேட்கும் பிறர்க்கும் சிவன்மாட்டு அன்பை வளரச் செய்யும். இதனாலன்றோ, சிவநாமம் கீதத்தோடு கூடுமாயின், சிவன் மிகப் பிரீதியுற்று எல்லையில்லாத திருவருளைச் சுரப்பர் என்க.
அது "விளக்கினார் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி - யாகுந் - துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேற லாகும் - விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு - மளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே" "இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி - யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை - மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த - நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணர்க.
சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் இவ்வானாயநாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குக் கருவி கீதத்தின் மிக்கது பிறிது இன்று என்னுங் கருத்தால் அன்றோ, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலால் வாசித்தலே தொழிலாகக் கொண்டனர். அது இங்கே "தம்பெரு மானடி யன்புறு கானத்தின் - மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல் கொண்டார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.
இவர் "உருகி - யொன்றியசிந்தையிலன்பை யுடையவர்" ஆகி, வாசித்த இவ்வேய்ங்குழல் வாசனையானது எவ்வுயிர்களையும் இசைமயமாக்கி, கசிந்து உருகச் செய்த பெருவியப்பை இங்கே ஆசிரியர் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த அருமைத் திருவாக்குக்களே எம்போலிகளுடைய கன்னெஞ்சையும் கசியச் செய்யுமாயின்; அவ்வாசனையின் பெருமையை யாமா கூறவல்லம்? இந்நாயனார் தமக்கு மாத்திரமன்றி எவ்வுயிர்க்கும் பயன்படுவதாய், நினைப்பினும் கேட்பினும் இனிமை பயக்கும் இத்திருத்தொண்டைச் சிவன்மாட்டு இடையறாது முறுகி வளரும் மெய்யன்போடு செய்தமையால் அன்றோ. "பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்" சிவன் இவருக்கு வெளிப்பட்டு, "எப்பொழுதுஞ் - செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க - விந்நின்ற நிலையேநம் பாலணைவாய்" என்று திருவாய்மலர்ந் தருளினார்.

கண்ணப்ப நாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற


பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

கத்தியரூபமாக செய்தது


இரண்டாவது இலைமலிந்த சருக்கம்

கண்ணப்ப நாயனார் புராணம்


நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே
னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி
வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான்
குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.

வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே.


பொத்தப்பி நாட்டிலே, உடுப்பூரிலே, வேடர்களுக்கு அரசனாகிய நாகன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் தத்தை. அவ்விருவரும் நெடுங்காலம் புத்திர பாக்கியம் இல்லாமையால் அதிதுக்கங்கொண்டு குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாகிய சுப்பிரமணியசுவாமியுடைய சந்நிதானத்திலே சேவற்கோழிகளையும், மயில்களையும் விட்டு, அவரை வழிபட்டு வந்தார்கள்.
சுப்பிரமணிய சுவாமியுடைய திருவருளினாலே தத்தையானவள் கருப்பவதியாகி, ஒரு புத்திரனைப் பெற்றாள். அப்பிள்ளையை நாகன் தன் கையிலே எடுத்தபொழுது திண்ணெனவாயிருந்தபடியால் அதற்குத் திண்ணன் என்று பெயரிட்டான்.
அத்திண்ணனார் வளர்ந்து உரிய பருவத்திலே வில்வித்தை கற்கத் தொடங்கி, அதிலே மகாசமர்த்தராயினார், நாகன் வயோதிகனானபடியால், வேட்டைமுயற்சியிலே இளைத்தவனாகி, தன்னதிகாரத்தைத் தன்புத்திரராகிய திண்ணனாருக்குக் கொடுத்தான்.

அந்தத்திண்ணனார் வேட்டைக் கோலங்கொண்டு வேடர்களோடும் வனத்திலே சென்று வேட்டையாடினார், வேட்டையாடும்பொழுது, ஒருபன்றியானது வேடராலே கட்டப்பட்ட வலையறும்படி எழுந்து, மிகுந்த விசையுடனே ஓடியது. அதைக் கண்ட திண்ணனார் அதைக்கொல்ல நினைந்து, அதைத் தொடர்ந்து பிடிக்கத்தக்க விசையுடனே அது செல்லும் அடிவழியே சென்றார். நாணன் காடன் என்கின்ற இரண்டு வேடர்கண்மாத்திரம் அவருக்குப் பின் ஓடினார்கள். அந்தப்பன்றி நெடுந்தூரம் ஓடிப்போய், இளைப்பினாலே மலைச்சாரலிலே ஒருமரத்தின் நிழலிலே நின்றது. திண்ணனார் அதைக் கண்டு அதனைச் சமீபித்து, உடைவாளை யுருவி அதனை இருதுண்டாகும்படி குத்தினார். நாணனும் காடனும் இறந்துகிடந்த அந்தப் பன்றியைக் கண்டு திண்ணனாரை வியந்து வணங்கி, "நெடுந்தூரம் நடந்து வந்த படியால் பசி நம்மை மிகவருத்துகின்றது. நாம் இந்தப்பன்றியை நெருப்பிலே காய்ச்சித் தின்று, த்ண்ணீர் குடித்துக்கொண்டு வேட்டைக்காட்டுக்கு மெல்லப்போவாம்" என்றார்கள். திண்ணனார் அவர்களை நோக்கி, "இவ்வனத்திலே தண்ணீர் எங்கே இருக்கின்றது" என்று கேட்க; நாணன் "அந்தத் தேக்கமரத்துக்கு அப்புறம் போனால், மலைப்பக்கத்திலே பொன்முகலி யாறு ஓடுகின்றது" என்றன். அதைக்கேட்ட திண்ணனார் "இந்தப் பன்றியை எடுத்துக்கொண்டு வாருங்கள்; நாம் அங்கே தானே போவோம்" என்று சொல்லி, அதை நோக்கி; நடந்து, அரைக்காதவழி தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற திருக்காளத்தி மலையைக் கண்டு, நாணனை நோக்கி, "நமக்குமுன்னாகத் தோன்றுகின்ற மலைக்குப் போவோம்" என்று சொல்ல; நாணன் "இந்தமலையிலே, குடுமித்தேவர் இருக்கிறார். நாம் போனாற் கும்பிடலாம்" என்றான்.
திண்ணனார் "இந்தமலையைக் கண்டு இதை அணுக அணுக என்மேல் ஏற்றப்பட்ட பெரிய பாரம் குறைகின்றது போலும். இனி உண்டாவது யாதோ! அறியேன்" என்று சொல்லி அதிதீவிரமாகிய விருப்பத்தோடும் விரைந்து சென்று, பொன்முதலியாற்றை அடைந்து, அதன் கரையிலிருக்கின்ற மரநிழலிலே, கொண்டுவந்த பன்றியை இடுவித்து, காடனைநோக்கி "தீக்கடைகோல் செய்து நெருப்பை உண்டாக்கு; நாங்கள் இம்மலையிலே ஏறி, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு வந்து சேருவோம்" என்று சொல்லி, நாணனோடும் அந்தப் பொன்முகலிநதியைக் கடந்து, மலைச்சாரலை அடைந்து, மலையிலே நாணன் முன்னே ஏற, தாமும் அளவில்லாத பேராசையோடும் ஏறிச் சென்று சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருத்தலைக் கண்டார்.
கண்டமாத்திரத்திலே, பரமசிவனுடைய திருவருட்பார்வையைப் பெற்று, இரும்பானது தரிசனவேதியினாலே உருவம் மாறிப் பொன்மயமானாற்போல முன்னுள்ள குணங்கள் மாறிச் சிவபெருமானிடத்தில் வைத்த அன்புருவமானார். நெடுங்காலம் பிரிந்திருந்த தன் குழந்தையைக் கண்ட மாதாவைப்போலத் தாழாமல் விரைந்தோடி, தோள்கள் ஞெமுங்கும்படி அக்கடவுளைத் தழுவி, மோந்து முத்தமிட்டார். நெடுநேரம் பெருமூச்சு விட்டுக்கொண்டு நின்று, சரீரம் முழுதிலும் உரோமாஞ்சங்கொள்ள. இரண்டு கண்ணினின்றும் கண்ணீர் சொரிய வெயிலிடைப்பட்ட மெழுகு போல மனங்கசிந்துருக. "இந்தச்சுவாமி அடியேனுக்கு அகப்பட்டது என்ன ஆச்சரியம்" என்று சொல்லி ஆனந்தங் கொண்டார். "ஐயையோ! சிங்கம் யானை புலி கரடி துட்ட மிருகங்கள் சஞ்சரிக்கின்ற காட்டிலே நீர் யாதொரு துணையுமின்றி வேடர்போலத் தனியே இருப்பது ஏது" என்று சொல்லித் துக்கித்து, தம்முடையகையில் இருந்த வில்லுக் கீழே விழுந்ததையும் அறிந்தவரகிப் பரவசமடைந்தார். பின் ஒருவாறு தெளிந்து "இவருடைய முடியிலே நீரை வார்த்துப் பச்சிலையையும் பூவையும் இட்டவர் யாரோ" என்றார்.
அப்பொழுது சமீபத்திலே நின்ற நாணன் "நான் முற்காலத்திலே உம்முடைய பிதாவுடனே வேட்டையாடிக் கொண்டு இம்மலையிலே வந்தபொழுது, ஒரு பிராமணன் இவர்முடியிலே நீரைவார்த்து, இலையையும் பூவையும் சூட்டி உணவை ஊட்டி, சிலவார்த்தைகள் பேசினதைக் கண்டிருக்கின்றேன், இன்றைக்கும் அவனே இப்படிச் செய்தான் போலும்" என்றான்.


கண்ணப்ப நாயனார். மட்/சிவாநந்தா வித்தியாலய மாணவர் ஒருவரால் சிவதொண்டன் நிலையம் நடாத்திய சித்திரப் போட்டிக்காக வரையப்பட்டது

அதைக்கேட்ட திண்ணனார் அந்தச் செய்கைகளே திருக்காளத்தியப்பருக்குப் பிரீதியாகிய செய்கைகளென்று கடைப்பிடித்தார். பின்பு, "ஐயோ! இவருக்கு அமுது செய்தற்கு இறைச்சிகொடுப்பார் ஒருவரும் இல்லை. இவர் அங்கே தனியே இருக்கின்றார். இறைச்சி கொண்டு வரும் பொருட்டு இவரைப் பிரியவோ மனமில்லை. இதற்கு யாதுசெய்வேன்? எப்படியும் இறைச்சிகொண்டு வரவேண்டும்" என்று சொல்லிக்கொண்டு, சுவாமியைப் பிரிந்து சிறிது தூரம் போவார். கன்றைவிட்டுப் பிரிகின்ற தலையீற்றுப் பசுப்போல அவரிடத்திற்குத் திரும்பி வருவார் கட்டி அணைத்துக் கொள்வார்; மீளப்போவார்; சிறிதுதூரம் போய் அத்தியந்த ஆசையோடு சுவாமியைத் திரும்பிப் பார்த்து நிற்பார். "சுவாமீ! நீர் உண்பதற்கு மிருதுவாகிய நல்ல இறைச்சியை நானே குற்றமறத் தெரிந்து கொண்டு வருவேன்" என்பார்.
"நீர் யாதொரு துணையுமின்றி இங்கே தனியே இருக்கிறபடியால் நான் உம்மைப் பிரியமாட்டேன். உமக்குப் பசி மிகுந்தபடியால் இங்கே நிற்கவுமாட்டேன். ஐயையோ! நான் யாது செய்வேன்" என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் இடைவிடாது பொழிய நிற்பார்.
பின்பு ஒரு பிரகாரம் போய் வரத்துணிந்து, விலை எடுத்துக்கொண்டு, கையினாலே கும்பிட்டு, சுவாமி சந்நிதானத்தை அருமையாக நீங்கி, மலையினின்றும் இறங்கி நாணன்பின்னே வர, பிறவிஷயங்களிலே உண்டாகும் ஆசை பரமாணுப் பிரமாணமாயினும் இன்றி, அன்புமயமாகி, பொன் முதலியாற்றைக் கடந்து கரை ஏறி, அங்குள்ள சோலையிலே புகுந்தார்.
அதுகண்டு காடன் எதிரேபோய்க் கும்பிட்டு, "நெருப்புக் கடைந்து வைத்திருக்கின்றேன். பன்றியின் அவயவங்களெல்லாவற்றையும் உம்முடைய அடையாளப்படி பார்த்துக்கொள்ளும். திரும்பிப் போதற்கு வெகுநேரம் சென்று போயிற்று. நீர் இவ்வளவு நேரமும் தாழ்த்தது என்னை" என்றான். நாணன் அதைக் கேட்டு "இவர் மலையிலே சுவாமியைக் கண்டு அவரைத் தழுவிக்கொண்டு மரப்பொந்தைப் பற்றிவிடாத உடும்பைப்போல அவரை நீங்கமாட்டாதவராய் நின்றார். இங்கேயும் அந்தச் சுவாமி உண்ணுதற்கு இறைச்சி கொண்டுபோம்பொருட்டு வந்திருக்கிறார். எங்கள் குலத்தலைமையை விட்டுவிட்டார். அந்தச் சுவாமி வசமாய்விட்டார்' என்றான். உடனே காடன் "திண்ணரே! நீர் என்ன செய்தீர்? என்ன பைத்தியங்கொண்டீர்" என்று சொல்ல; திண்ணனார் அவன் முகத்தைப் பாராமல், பன்றியை நெருப்பிலே வதக்கி; அதினுடைய இனிய தசைகளை அம்பினாலே வெவ்வேறாகக் கிழித்து அம்பிலே கோத்து நெருப்பிலே காய்ச்சி, பதமாக வெந்தவுடனே, சுவைபார்க்கும்படி அவைகளைத் தம்முடைய வாயிலே இட்டுப் பல்லினாலே மெல்ல மெல்லப் பலமுறை அதுக்கிப் பார்த்து, மிக இனியனவாகிய இறைச்சிகளெல்லாவற்றையும் தேக்கிலையினாலே தைக்கப்பட்ட கல்லையிலே வைத்து, இனியனவல்லாத இறைச்சிகள் எல்லாவற்றையும் புறத்திலே உமிழ்ந்தார். அதைக் கண்ட நாணன் காடன் புறத்திலே உமிழ்ந்தார்.
அதைக் கண்ட நாணன் காடன் இருவரும், "இவர் மிகப் பைத்தியங் கொண்டிருக்கின்றார். பெறுதற்கரிய இறைச்சியைக் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி வீணாக உமிழுகின்றார். மற்றையிறைச்சியைப் புறத்திலே எறிந்து விடுகின்றார். தாம் மிகப் பசியுடையராயிருந்தும், தனை உண்கின்றாரில்லை. எங்களுக்குத் தருகின்றாருமில்லை. இவர் தெய்வப் பைத்தியங் கொண்டுக்கின்றார். இதனைத் தீர்க்கத்தக்க வழி ஒன்றையும் அறியோம். தேவராட்டியையும் நாகனையும் அழைத்துக் கொண்டுவந்து இதைத் தீர்க்கவேண்டும். வேட்டைக்காட்டிலே நிற்கின்ற ஏவலாளரையும் கொண்டு நாங்கள் போவோம்" என்று நினைத்துக்கொண்டு போனார்கள்.
திண்ணனார் அவ்விருவரும் போனதை அறியாதவராகி, சீக்கிரம் கல்லையிலே மாமிசத்தை வைத்துகொண்டு, திருமஞ்சனமாட்டும்பொருட்டு ஆற்றில் நீரை வாயினால்முகந்து, பூக்களைக்கொய்து தலைமயிரிலே செருகி, ஒருகையிலே வில்லையும் அம்பையும் மற்றக்கையிலே இறைச்சி வைத்த தேக்கிலைக்கல்லையையும் எடுத்துக்கொண்டு, "ஐயோ! என்னுயிர்த் துணையாகிய சுவாமி மிகுந்த பசியினால் இளைத்தாரோ" என்று நினைந்து இரங்கிப் பதைபதைத்து ஏங்கி, தன் குஞ்சுக்கு இரை அருந்துதற்குத் தாழாதோடுகின்ற பறவைபோல மனோகதியும் பின்னிட ஓடிப்போய்க் கடவுளை அடைந்தார். அடைந்து, அவருடைய திருமுடிமேல் இருந்த பூக்களைத் தம்முடைய காற்செருப்பால் மாற்றி, தம்முடைய வாயில் இருக்கின்ற திருமஞ்சனநீரைத் தம்முடைய மனசில் உள்ள அன்பை உமிழ்பவர்போலத் திருமுடியின் மேல் உமிழ்ந்து, தம்முடைய தலையில் இருந்த பூக்களை எடுத்துத் திருமுடியின் மேல் சாத்தி, தேக்கிலையிலே படைத்த இறைச்சியைத் திருமுன்னே வைத்து, "சுவாமீ! கொழுமையாகிய இறைச்சிக ளெலாவற்றையும் தெரிந்து, அம்பினாலே கோத்து நெருப்பிலே பதத்தோடு காய்ச்சிப் பல்லினால் அதுக்கி, நாவினாலே சுவைபார்த்துப் படைத்தேன். இவ்விறைச்சி மிக நன்றாயிருக்கின்றது. எம்பெருமானே! இதை அமுதுசெய்தருளும்" என்று சொல்லி, உண்பித்தார்.
பின்பு சூரியன் அஸ்தமயமாயிற்று, திண்ணனார் அவ்விரவிலே துஷ்டமிருகங்கள் சுவாமிக்குத் துன்பஞ்செய்தல் கூடுமென்று அஞ்சி, அம்பு தொடுக்கப்பட்ட வில்லைக் கையிலே பிடித்துக்கொண்டும், மறந்தும் கண்ணிமையாமல் சுவாமிக்குப் பக்கத்திலே விழித்துக்கொண்டு நின்றார். அப்படி நின்ற திண்ணனார் வைகறையிலே சுவாமிக்கு இறைச்சி கொண்டுவரும் பொருட்டு, வேட்டையாடுதற்கு மலைச்சாரலுக்குப் போனார்.
அது நிற்க.
அறிவு அருள் அடக்கம் தவம் சிவபத்தி முதலியவைகளெல்லாம் திரண்டொருவடிவம் எடுத்தாற்போன்றவரும், நல்வினை தீவினைகளால் வரும் ஆக்கக்கேடுகளிலே சமபுத்தி பண்ணுகின்றவரும், யாவரையும் கோகிப்பிக்க வல்லமகா செளந்திரியமுள்ள பெண்கள் வலிய வந்து தம்மைத் தழுவினும் பரமாணுப்பரிமாணமாயினும் சிந்தந்திரியாமல் அவர்களைத் தாயென மதிக்கும் மகாமுனிவரும், திருக்காளத்தியப்பரைத் தினந்தோறும் சைவாகமவிதிப்படி அருச்சிப்பவருமாகிய சிவகோசரியார் என்பவர், பிரமமுகூர்த்தத்திலே எழுந்து போய், பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி, சுவாமியை அருச்சிக்கும் பொருட்டுத் திருமஞ்சனமும் பத்திர புஷ்பமும் எடுத்து, சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு, சுவாமி சந்நிதனத்திலே போனார். போம் பொழுது அங்கே வெந்த இறைச்சியும் எலும்பும் கிடக்கக் கண்டு நடுநடுங்கி, குதித்துப் பக்கத்திலே ஓடினார்.
ஓடி நின்று, "தேவாதிதேவரே! தேவரீருடைய சந்நிதானத்தை அடைதற்கு அஞ்சாத துஷ்டராகிய வேட்டுவப்புலையர்களே இந்த அநுசிதத்தைச் செய்தார்கள் போலும், அவர்கள் இப்படிச் செய்து போதற்குத் தேவரீர் திருவுளம் இசைந்தீரோ" என்று சொல்லி, பதறி அழுது விழுந்து புரண்டார். பின்பு 'சுவாமிக்கு அருச்சனை செய்யாமல் தாழ்த்தலால் பயன்யாது' என்று நினைந்து, அங்கே கிடந்த இறைச்சியையும் எலும்பையும் கல்லையையும் திருவலகினால் மாற்றி, சம்புரோக்ஷணஞ்செய்து, மீளப் பொன் முதலியாற்றிலே ஸ்நானஞ் செய்து, திரும்பிவந்து, வேத மந்திரத்தினாலே சுத்திசெய்து, உருத்திரசமா நமகத்தினால் சுவாமிக்கு அபிஷேகம் பண்ணி பத்திரபுஷபங்களால், அருச்சனை செய்தார் செய்து, திருமுன்னே நின்று, இரண்டு கைகளையும் சிரசின்மேலே குவித்து, இரண்டு கண்களினின்றும் ஆனந்த பாஷ்பஞ்சொரிய திருமேனியெங்கும் மயிர்பொடிப்ப, அக்கினியில் அகப்பட்ட மெழுகுபோல மனம் மிக உருகி இளசு, நாத்தழும்ப, கீத நடையுள்ளதாகிய சாமவேதம் பாடினார். பாடியபின் பலமுறை பிரதக்ஷிணஞ்செய்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, அருமையாக நீங்கிப் போய், தபோவனத்தை அடைந்தார். அது நிற்க.
முன்னே வேட்டையாடுதற்கு மலைச்சாரலிலே சென்ற திண்ணனார் பன்றி மான் கலை மரை கடமை என்னு மிருகங்களைக்கொன்று, அவைகளினிறைச்சியை முன்போலப் பக்குவப்படுத்தி, தேக்கிலையில் வைத்து, கோற்றேனைப் பிழிந்து, அதனோடு கலந்து, முன்போலத் திருமஞ்சனமும் புஷ்பமுங்கொண்டு, மலையிலே ஏறி, சுவாமிசந்நிதானத்தை அடைந்து, முன்போலப் பூசைசெய்து, இறைச்சிக் கல்லையைத் திருமுன்னே வைத்து, "இந்த இறைச்சி முன்கொண்டுவந்தது போலன்று, இவை பன்றி மான் கலை மரை கடமை என்கின்ற மிருகங்களின் இறைச்சி, இவைகளை அடியேனும் சுவைத்துப் பார்த்திருக்கின்றேன். தேனும் கலந்திருகிறது. தித்திக்கும்" என்று சொல்லி, உண்பித்து, அவருக்குப் பக்கத்திலே பிரியாமல் நின்றார். அப்பொழுது முதனாட்போன நாணனும் காடனும் ஆகிய இருவராலும் தன்புத்திரராகிய திண்ணனாருடைய செய்கைகளை அறிந்த நாகன் ஊணும் உறக்கமுமின்றித் தேவராட்டியையுங் கொண்டுவந்து, திண்ணனாரைப் பற்பல திறத்தினாலே வசிக்கவும், அவர் வசமாகாமையைக் கண்டு, சிந்தை நொந்து, "இனியாதுசெய்வோம்" என்று சொல்லிக்கொண்டு; அவரை விட்டுத் திரும்பிப் போய்விட்டான்.
சிவபெருமானோடு ஒற்றுமைப்பட்டு அவ்விறைப்பணியின் வழுவாது நிற்குந் திண்ணனார் பகற்காலத்திலே மிருகங்களைக் கொன்று சுவாமிக்கு இறைச்சியை ஊட்டியும், இராக்காலத்திலே நித்திரை செய்யாமல் சுவாமிக்கு அருகே நின்றும், இப்படித் தொண்டுசெய்து வந்தார். சிவகோசரியாரும் தினந்தோறும் வந்து, சந்நிதானத்திலே இறைச்சி கிடத்தலைக் கண்டு, இரங்கிச் சுத்திசெய்து, சைவாகமவீதிப்படி அருச்சித்துக்கொண்டு, "இந்த அநுசிதம் நிகழாமல் அருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்து வந்தார்.
திருக்காளத்தியப்பர் அந்தச் சிவகோசரியாருடைய மனத்துயரத்தை நீக்கும்பொருட்டு ஐந்தாநாள் இராத்திரியில் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "அன்பனே! அவனை வேடுவன் என்று நீ நினையாதே. அவனுடைய செய்கைகளைச் சொல்வோம்.; கேள். அவனுடைய உருவமுழுவதும் நம்மேல் வைக்கப்பட்ட அன்புருவமே. அவனுடைய அறிவுமுழுதும் நம்மை அறியும் அறிவே, அவனுடைய செய்கைகள் எல்லாம் நமக்கு இதமாகிய செய்கைகளே. நம்முடைய முடியின்மேல் உன்னாலே சாத்தப்பட்ட பூக்களை நீக்கும்படி அவன் வைக்கின்ற செருப்படி நம்முடைய குமாரனாகிய சுப்பிரமணியனுடைய காலினும் பார்க்க நமக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தருகின்றது. அவன் தன் வாயினால் நம்மேல் உமிழுகின்ற ஜலமானது, அன்புமயமாகிய அவனுடைய தேகமென்னும் கொள்கலத்தினின்றும் ஒழுகுகின்ற படியால்; கங்கை முதலாகிய புண்ணிய தீர்த்தங்களைப் பார்க்கினும் நமக்குப் பரிசுத்தமுள்ளதாய் இருக்கின்றது. அவன் தன்னுடைய தலைமயிரிலே செருகிக்கொண்டு வந்து நமக்குச் சாத்துகின்ற புஷ்பங்கள், அவனுடைய மெய்யன்பானது விரிந்து விழுதல்போல விழுதலால், பிரம விஷ்ணு முதலாகிய தேவர்கள் நமக்குச் சாத்தும் புஷ்பங்களும் அவைகளுக்குச் சற்றேனும் சமானமாகாவாம். அவன் நமக்குப் படைக்கின்ற மாமிசம், பதமாக வெந்திருக்கின்றதோ என்று அன்பினால் உருகி இளகிய மனசினோடும் மென்று, சுவைபார்த்துப் படைக்கப் பட்டபடியால், வேதவிதிப்படி யாகம் செய்கின்றவர்கள் தரும் அவியிலும் பார்க்க நமக்கு அதிக மதுரமாயிருக்கின்றது. அவன் நம்முடைய சந்நிதனத்தில் நின்று சொல்லும் சொற்கள், நிஷ்களங்கமாகிய அன்பினோடும் நம்மையன்றி மற்றொருவரையும் அறியாது வெளிப்படுதலால், வேதங்களும் மகாமுனிவர்கள் மகிழ்ந்து செய்கின்ற ஸ்தோத்திரங்களும் ஆகிய எல்லாவற்றிலும் பார்க்க நமக்கு மிக இனியனவாயிருக்கின்றன. அவனுடைய அன்பினால் ஆகிய செய்கைகளை உனக்குக் காட்டுவோம். நீ நாளைக்கு நமக்குப் பிற்பக்கத்திலே ஒளிந்திருந்து பார்" என்று சொல்லி மறைந்தருளினார். சிவகோசரியார் சொப்பனாவத்தையை நீங்கிச் சாக்கிராவத்தையை யடைந்து, பரமசிவன் தமக்கு அருளிச்செய்த திருவார்த்தகளை நினைந்து நினைந்து, "அறியாமையே நிறைந்துள்ள இழிவாகிய வேடுவர் குலத்திலே பிறந்த அவருக்கு வேதாகமாதி சாஸ்திரங்களிலே மகாபாண்டித்தியமுடைய மகாமுனிவர்கள் தேவர்களிடத்திலும் காணப்படாத உயர்வொப்பில்லாத இவ்வளவு பேரன்பு வந்தது, ஐயையோ! எவ்வளவு அருமை அருமை" என்று ஆச்சரியமும், "இப்படிப்பட்ட பேரன்பர் செய்த அன்பின் செய்கைகளைப் புழுத்தநாயினும் கடையனாகிய பாவியேன் அநுசிதம் என்று நினைந்தேனே! ஐயையோ? இது என்ன கொடுமை" என்று அச்சமும் அடைந்து, வைகறையிலே போய்ப் பொன்முகலியாற்றிலே ஸ்நானம் பண்ணி மலையில் ஏறி, முன்போலச் சுவாமியை அருச்சித்து, அவருக்குப் பிற்பக்கத்திலே ஒளித்திருந்தார்.
சிவகோசரியார் வருதற்கு முன்னே வேட்டையாடுதற்குச் சென்ற திண்ணனார் வேட்டையாடி, இறைச்சியும் திருமஞ்சனமும் புஷ்பமும் முன்போல அமைத்துக்கொண்டு அதிசீக்கிரந் திரும்பினார். திரும்பி வரும்பொழுது, பலபல துர்ச்சகுனங்களைக்கண்டு, "இந்தச்சகுனங்களெல்லாம் உதிரங் காட்டுகின்றன. ஆ கெட்டேன்! என்கண்மணிபோன்ற சுவாமிக்கு என்ன அபாயம் சம்பவித்ததோ! அறியேனே" என்று மனங்கலங்கி, அதிசீக்கிரம் நடந்தார்.
அடியார்களுடைய பத்தி வலையில் அகப்படுகின்ற அருட்கடலாகிய பரமசிவன் திண்ணனாருடைய அன்பு முழுதையும் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட்டுத் திருவுளங்கொண்டு, தம்முடைய வலக்கண்ணினின்றும் இரத்தம் சொரியப்பண்ணினார். திண்ணனார் தூரத்திலே கண்டு விரைந்தோடி வந்தார் வந்தவுடனே, இரத்தஞ் சொரிதலைக் கண்டார். காண்டலும், வாயிலுள்ள திருமஞ்சனம் சிந்த, கையில் இருந்த இறைச்சி சிதற, அம்பும் வில்லும் விழ, தலைமயிரிலே செருகப்பட்ட புஷ்பங்கள் அலைந்து சோர, ஆட்டுகின்ற கயிறு அற்றபொழுது வீழ்கின்ற நாடகப் பாவைபோலச் சீக்கிரம் பதைபதைத்து நிலத்திலே விழுந்தார். விழுந்தவர் எழுந்து போய், இரத்தத்தைப் பலமுறை கையினாலே துடைக்க; அது காலுதல் தவிராமையைக் கண்டு, அதற்கு இன்னது செய்வோம் என்று அறியாதவராகி, பெருமூச்செறிந்து, திரும்பிப்போய் விழுந்தார். நெடும்பொழுது உள்ளுயிர்த்தமின்றி இறந்தவர்கள் போலக்கிடந்தார்,
பின் ஒருவாறு தெளிந்து, "இப்படிச் செய்தவர்கள் யாவர்" என்று சொல்லிக்கொண்டு எழுந்தார். எங்கும் பார்த்தார், வில்லையெடுத்து அம்புகளைத் தெரிந்துகொண்டு "என்னுடைய சுவாமிக்கு இத்தீங்கு வந்தது எனக்குப் பகைவர்களாகிய வேடுவர்களாலோ இந்தவனத்திற் சஞ்சரிக்கின்ற துஷ்ட மிருகங்களாலோ! யாதென்று தெரியவில்லையே" என்று சொல்லி, மலைப்பக்கங்களிலே நெடுந்தூரமட்டும் தேடிப் போனார். வேடர்களையேனும் விலங்குகளையேனும் காணாதவராகி, திரும்பிவந்து, குறைவில்லாத துன்பத்தினாலே மனம் விழுங்கப்பட்டு, சுவாமியைக் கட்டிக்கொண்டு, இடியேறுண்ட சிங்கேறுபோல வாய்விட்டுக் கண்ணீர்சொரிய அழுதார். "என்னுயிரினும் சிறந்தவரும் அடைந்தவர்கள் அன்பினாலே ப்ரியமாட்டாதவரும் ஆகிய சுவாமிக்கு எப்படி இந்தத் துன்பம் சம்பவித்ததோ! இதைத் தீர்ப்பதற்கு மருந்தொன்றை அறியேனே! ஐயையோ! இதற்கு என்ன செய்வேன்" என்றார். இந்த உதிரம் என்னசெய்தால் நிற்குமோ? இந்தத் தீங்கைச் செய்தவர்களைக் காணேன். வேடர்கள் அம்பினாலாகிய புண்ணைத் தீர்க்கின்ற பச்சிலைமருந்துகளை மலையடிவாரத்திலே பிடுங்கிக்கொண்டு வருவேன்" என்று சொல்லிக்கொண்டு போனார். தன்னினத்தைப் பிரிந்துவந்த இடபம்போலச் சுவாமியைப் பிரிந்து வந்ததினால் வெருட் கொண்டு வனங்களெங்குந் திரிந்து, பல்வகையாகிய பச்சிலைகளைப் பிடுங்கிக் கொண்டு, சுவாமிமேல் வைத்த மனசிலும் பார்க்க விரைந்து வந்து, அம்மருந்துகளைப் பிழிந்து அவர் கண்ணிலே வார்த்தார். அதினால், அக்கண்ணிவிரத்தம் தடைப்படாமையைக் கண்டு, ஆவிசோர்ந்து, "இனி நானிதற்கு என்ன செய்வேன்" என்று ஆலோசித்துக் கொண்டு நின்றார். நிற்க.



"ஊனுக்கு ஊனிடம் வேண்டும்" என்னும் பழமொழி அவருடைய ஆத்தியானத்திலே வந்தது. உடனே, "இனி என்னுடைய கண்ணை அம்பினாலே இடந்து அப்பினால் சுவாமியுடைய கண்ணினின்றும் பாயும் இரத்தம் தடைப்படும்" என்று நிச்சயித்துக்கொண்டு, மன மகிழ்ச்சியோடும் திருமுன்னே இருந்து, அம்பையெடுத்துத் தம்முடைய கண்ணணத்தோண்டிச் சுவாமியுடைய கண்ணிலே அப்பினார். அப்பினமாத்திரத்திலே இரத்தம் தடைப்பட்டதைக் கண்டார். உடனே அடங்குதற்கரிய சந்தோஷமாகிய கடலிலே அமிழ்ந்திக் குதித்துப் பாய்ந்தார். மலைபோலப் பருத்த புயங்களிலே கைகளினாலே கொட்டி ஆரவாரித்தார் கூத்தாடினார். "நான் செய்த செய்கை நன்று நன்று" என்று சொல்லி வியந்து, அத்தியந்த ஆனந்தத்தினாலே உன்மத்தர் போலாயினார். இப்படிச் சந்தோஷசாகரத்திலே உலாவும் பொழுது, திருக்காளத்தியீசுரர் அந்தத் திண்ணனாருடைய பேரன்பைச் சிவகோசரியாருக்குப் பின்னுங் காட்டுதற்குத் திருவுளங்கொண்டு, தம்முடைய மற்றையிடக்கண்ணிலும் இரத்தஞ்சொரியப்பண்ணினார். அது திண்ணனாருடைய அளவில்லாத சந்தோஷசாகரத்தை உறிஞ்சியது. அக்கினி நிரயத்துள்ளே விழுந்து நெடுங்காலம் துன்பமுற்று அதனை நீங்கிச் சுவர்க்கத்தை அடைந்து இன்பமுற்றோனொருவன் பின்னும் அந்நிரயத்திலே வீழ்ந்தாற் போல, திண்ணவார் உவகைமாறி, கரையில்லாத துன்பக் கடலிலே அழுந்தி ஏங்கி, பின்னர் ஒருவாறு தெளிந்து, "இதற்கு நான் அஞ்சேன், மருந்து கைகண்டு கொண்டேன் இன்னும் ஒருகண்ணிருக்கின்றதே! அதைத்தோண்டி அப்பி இந்நோயைத் தீர்ப்பேன்" என்று துணிந்து. தம்முடைய கண்ணைத் தோண்டியபொழுது சுவாமியுடைய கண் இவ்விடத்திலிருக்கின்றது என்று தெரியும் பொருட்டு, ஒரு செருப்புக்காலை அவர் கண்ணின் அருகிலே ஊன்றிக் கொண்டு, பின்னே மனசிலே பூர்த்தியாகிய விருப்பத்தோடும் தம்முடைய கண்ணைத்தோண்டும்படி அம்பைவைத்தார். தயாநிதியாகிய கடவுள் அதைச் சகிக்கலாற்றாதவராகி, வேதாகமங்கள் தோன்றிய தம்முடைய அருமைத் திருவாய் மலரைத் திறந்து, "நில்லு கண்ணப்ப நில்லு! கண்ணப்ப! என்னன் புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப! என்று அருளிச் செய்து, அவருடைய கண்ணைத் தோண்டும் கையைத் தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத்திற்றோன்றிய திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டார். உடனே பிரமாதி தேவர்கள் சமஸ்தரும் வேதகோஷத்தோடும் நிலம் புதையக் கற்பகப் பூமாரி பெய்தார்கள். மகாஞானியாகிய சிவகோசரியார் இந்தச் சமாசாரம் முழுதையும் கண்டு, அத்தியந்த ஆச்சரியமடைந்து, சுவாமியை வணங்கினார். அற்றைநாள் முதலாகப் பெரியோர்கள் சுவாமி சொல்லிய படியே அவருக்குக் கண்ணப்பர் என்னும் பெயரையே வழங்குகிறார்கள். நெடுங்காலமாக உஷ்ணமாகிய அக்கினி மத்தியில் நின்று ஐம்புலன் வழியே செல்லாதபடி மனசை ஒடுக்கி அருந்தவஞ் செய்கின்றவர்களுக்கும் கிட்டாத பரம்பொருளாகிய கடவுள் ஆறுநாளுக்குள்ளே பெருகிய அன்பு மேலீட்டினாலே, தம்முடைய திருநயனத்தில் இரத்தத்தைக் கண்டு அஞ்சித் தம்முடைய கண்ணை இடந்து அத்திருநயனத்தில் அப்புந் திண்ணனாருடைய கையைத் தமது அருமைத் திருக்கரத்தினாலே பிடித்துக்கொண்டு, "நிஷ்களங்க பத்தியையுடைய கண்ணப்பா, நீ நமக்கு வலப்பக்கத்திலே நில்" என்று திருவருள் புரிந்தார்.

இதைப் பார்க்கிலும் பெற வேண்டிய பெரும்பேறு யாது?

திருச்சிற்றம்பலம்
இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது

பின்னிணைப்பு:
கண்ணப்ப நாயனார் புராண சூசனம்
அன்புடைமை

எமக்கு இனியரென்று எம்மாலே தெளியப்பட்டவர் யாவரோ அவரிடத்தே எமக்கு விருப்பம் நிகழும். எமக்கு யாவரிடத்து விருப்பம் நிகழுமோ அவரிடத்தே எமக்கு அன்பு நிகழும். அன்பாவது தன்னால் விரும்பப்படவரிடத்தே தோன்றும் உள்ள நிகழ்ச்சி. ஆதலால், நாம் நமக்கு இனியவர் யாவரென்று ஆராய்ந்து, நிச்சயிப்பேம். தந்தை தாய் மனைவி மைந்தர் முதலிய உறவினரே எமக்கு இனியரெனக் கொள்வமெனின், இவருக்கும் எமக்கும் உளதாகிய தொடர்ச்சி நீர்க்குமிழிபோல நிலைமில்லாததாகிய இவ்வுடம்பினால் ஆயதாதலானும்; இவ்வுடம்பு ஒழியவே இதனாலாகிய தொடர்ச்சியும் ஒழிதவானும்; உடம்பினாலே தொடர்ச்சி உள்ளபோதும், நாம் தீவினைப் பயனை அனுபவிக்கும்வழி இவ்வுறவினரே பகைவராகவும், நல்வினைப் பயனை அனுபவிக்கும் வழி இவரல்லாத பகைவரும் உறவராகவும், காண்டலானும்; இவர் உறவராய் நின்றவழியும், எமக்கு இதம் செய்தல் தம் பயன் கருதியன்றி எம் பயன் கருதியன்மையானும், இவர் எமக்கு இனியரென்று கொள்ளுதல் ஒருவாற்றானும் கூடாது. நாமோ நம்மை ஒருகாலும் பகைத்தலின்மையானும், எந்நாளும் துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தை அனுபவித்தல் வேண்டுமென்னும் கருத்தே நமக்கு உண்மையானும், நமக்கு நாமே இனியமெனக் கொள்வமெனின், கேவலாவத்தையிலே ஆணவமல மறைப்பினாலே அறிவும் தொழிலும் சிறிதும் விளங்காமையானும், சகலாவத்தையிலே அறிவும் தொழிலும் உள்வழியும், அவை சிற்றறிவும் சிறுதொழிலுமன்றி முற்றறிவும் முற்றுத்தொழிலும் அன்மையானும், அதனால் எமக்கு இது துன்பம் இது துன்பத்தினின்றும் நீங்கி இன்பம் பெறும் நெறி இது என உள்ளபடி அறிந்து துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுதல் கூடாமையானும், எமக்கு நாமே இனியமெனக் கொள்ளுதலும் கூடாது. முற்றறிவு முற்றுத் தொழில் உடையராகி, தம் பயன் குறியாது மலபெத்தராகிய ஆன்மாக்கள் மேல் வைத்த பெருங்கருணையினாலே, அவர்களுக்குத் தனுகரணங்களைக் கொடுத்து, ஆணவமல சத்தியைச் சிறிது நீக்கி, அறிவை விளக்கிப் போகங்களைப் புசிப்பித்து, மலபரிபாகமும் இருவினையொப்பும் சத்திநிபாதமும் வருவித்து, பாச நீக்கமும் சிவத்துவவிளக்கமும் செய்யும் பரமபதி ஒருவர் உண்மையானும், அவர் சிவனே ஆதலானும், அவரே எமக்கு இனியரெனக் கொள்ளல் வேண்டும்.
இக்கருத்தனைத்தும் நோக்கி அன்றோ, "என்னில் பிரரு மெனக்கினி யாரிலை - யென்னி லும்மினி யானொரு வன்னுள - னென்னுளே யுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் - கென்னு ளெநிற்கு மின்னம்ப ரீசனே" என்று திருவாய் மலர்ந்தருளினார் திருநாவுக்கரசுநாயனார் என்க. ஆதலால், அச்சிவனையே நாமெல்லாம் விரும்பி, அவரிடத்து இடையறாத மெய்யன்பு செய்தல் வேண்டும். அன்பு பத்தி என்பன ஒரு பொருட் சொற்கள்.
அன்பானது, குடத்துள் விளக்கும் உறையுள் வாளும் போல, ஒருவர் காட்டக் காணற்பாலதன்று; அவ்வன்புடைமையால் வெளிப்படும். செயல்களைக் கண்டவழி, இவை உண்மையால், இங்கே அன்பு உண்டென்று அநுமிதித்துக் கொள்ளற்பாலதாம். அது "அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் - புன்கணீர் பூச றரும்" என்னும் திருக்குறளானும், "சுரந்த திருமுலைக்கே துய்யதிருஞானஞ் - சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த - மனமுடையா ளன்பிருந்த வாறு" என்னும் திருக்களிற்றுப்படியாரானும் உணர்க. சிவனிடத்து அன்புடைமைக்கு அடையாளம் அச்சிவனுடைய உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்த பொழுதே தன்வசம் அழிதலும், மயிர்க்கால்தோறும் திவலை உண்டாகப் புளகம் கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரை தடுமாறலும், ஆடலும், பாடலும், அவர் உவப்பன செய்தலும், வெறுப்பன ஒழிதலும் பிறவுமாம்.
இவ்வன்பு இல்வழிச் சிவனை அடைதல் ஒருவாற்றானும் கூடாது. அது "உள்ள முள்கலந் தேத்தவல்லார்க்கலாற் - கள்ள முள்ளவ ருக்கருள் வானலன் - வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை - வள்ள ல甶கிய வான்மியூ ரீசனே." "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே - புக்கு நிற்கும் பொன் னார் சடைப் புண்ணியன் - பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு - நக்கு நிற்ப னவர் தம்மை நாணியே" என வரும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "தேவ தேவன்மெய்ச் சேவகன் றென்பே ருந்துறை நாயகன் - மூவ ராலு மறியொ ணாமுதலாய வானந்த மூர்த்தியான் - யாவ ராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான் - றூய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே" என்னும் திருவாசகத்தானும், "என்பே விறகா விறைச்சி யறுத்திட்டுப் - பொன்போ லெரியிற் பொரிய வறுப்பினு - மன்போ டுருகி யகங்குழைந் தார்க்கன்றி - யென்போன் மணியினை யெய்தவொண் ணாதே" என்னும் திருமந்திரத்தானும், "அன்பேயென் னன்பேயென் றன்பாவழைத் தழைத்திட் - டன்பேயன் பாக வறிவழியு - மன்பன்றித் தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமது - சாத்தும் பழமன்றே தான்" என்னும் திருக்களிற்றுப்படியாரானும், "கருமமா தவஞ்செ பஞ்சொல் காசறு சமாதி ஞானம் - புரிபவர் வசம தாகிப் பொருந்திடேம் புரை யொன்றின்றித் - திரிவறு மன்பு செய்வோர் வசமதாய்ச் சேர்ந்து நிற்போ - முரைசெய்வோ மலர்மு னெய்தி யவருளத் துறைவோ மென்றும்." என்னும் வாயுசங்கிதையானும் அறிக. இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த புண்ணிய மிகுதியினாலே சிவன் அருளிச் செய்ய வரும். சிவன் அருளின்றி இவ்வன்பு ஒருவாற்றானும் நிகழாது. அது "ஆங்கவ னருளாற் பத்திநன் குண்டாம் பத்தியா லவனரு ளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கருமமியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தியாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." எ-ம். "அற்றுமன் றறியச் சுருங்கயா னுரைப்ப னாயிழை பாகன்வார் கழலிற் - றெற்றன வறிவாற் பத்திமை யெய்தல் வேண்டுமாற் சிறந்தபத் திமையான் - மற்றிணையில்லா முத்தியெய் திடுமான் மாசிலா தாயபத் திமையு - முற்றிழைபாக னருளினா லெய்தல் வேண்டுமான் மொழிந்திடுங்காலே" எ-ம். வாயுசங்கிதையிற் கூறுமாற்றால் உணர்க.
இடையறாது முறுகி வளரும் அன்பின் முதிர்ச்சியிலே சிவம் விளங்கும். ஆதலால் அன்பும் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். அன்பு முதிர்ச்சியிலே சிவம் விளங்கும் என்பதற்குப் பிரமாணம், திருவாசகம்; "பத்தி வலையிற் படுவோன் காண்க." எ-ம். "அம்மையே யப்பா வொப்பிலா மணியே யன்பினில் விளைந்தவா ரமுதே - பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் - செம்மையே யாய சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே - யிம்மையே முன்னைச் சிக்கெனப் பிடித்தே னெங்கெழுந் தருளுவ தினியே" எ-ம்; திருக்களிற்றுப்படியார். "ஆரேனு மன்பு செயி னங்கே த்லைப்படுங்கா - ணாரேனுங் காணா வரன்." எ-ம். வரும்.
அன்பும் சிவமும் அபேதமாம் என்பதற்குப் பிரமாணம், திருமந்திரம்; "அன்பு சிவமிரண் டென்பரறிவிலா - ரன்பே சிவமாவ தாரு மறிகில - ரன்பே 瑊ிவமாவ தாரு மறிந்தபி - னன்பே சிவமா யமர்ந்திருப்பாரே." எ-ம். திருவாசகம்; "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே - யூறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந் - தருளாய் - தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே - யீறிலாப் பதங்களி யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே." எ-ம் வரும்.
இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய இவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பின்றி விளங்கிய பெருந்தகைமையினர் இக்கண்ணப்ப நாயனார், இவர் வேதாகமங்களைக் கற்றல் கேட்டல் சிறிதும் இல்லா வேட்டுவச் சாதியிற் பிறந்தும், சிவனிடத்து மெய்யன்புடையராயினதற்குக் காரணம் என்னை எனின், முற்பிறப்பிலே வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவனைத் தமது மனம் வாக்குக் காயங்களினாலே சிரத்தையுடன் உபாசித்தமையேயாம். இவர் முற்பிறப்பிற் செய்த தவமே இப்பிறப்பில் எல்லையின்றி முறுகி வளர்ந்த இவ்வன்புக்குக் காரணமாயிற்றென்பது இங்கே "முன்பு செய் தவத்தினீட்ட முடிவிலா வின்பமான - வன்பினை யெடுத்துக்காட்ட" என்பதனால் உணர்த்தப்பட்டது. இவர் முற்பிறப்பிலே பஞ்சபாண்டவருள் ஒருவராகிய அருச்சுனர் என்றுணர்க. பாசுபதாஸ்திரம் பெறவேண்டிப் பெருந்தவஞ் செய்த அருச்சுனரோடு கருணாநிதியாகிய பரமசிவன் வேட்டுவ வடிவங்கொண்டு வந்து, விற்போர் செய்து, அவரது வில்லினால் அடிபட்டு, பின்பு அவரைத் தீண்டி மற்போர் செய்து, பின்னர்த் தமது வடிவத்தைக் காட்ட, அது கண்ட அருச்சுனர் சிவனை வணங்கி, தமக்கு முத்தி தந்தருளும் பொருட்டு விண்ணப்பம் பண்ணினார்.
அதுகேட்ட பரமசிவன், 'நீ பகைவரைக் கொல்லுதற்பொருட்டுப் பாசுபதாஸ்திரம் பெற நினைந்து, தவம் செய்தாய்; ஆதலால், இப்பொழுது பாசுபதாஸ்திரமே தருவோம்" என்று கொடுத்தருளி, "நீ என்னை வேடன் என்று இகழ்ந்தமையால் வேட்டுவராசனாய்ப் பிறந்து, தக்ஷிணகைலாசமாகிய காளத்தி மலையை அடைந்து அன்புருக்கொண்டு, நம்மைப் பூசித்து, பன்றி முதலிய விலங்குகளைக் கொன்று, அவற்றின் மாமிசத்தை எமக்கு நிவேதிப்பாய்; அந்நாளிலே உனக்கு மோக்ஷம் தந்தருளுவோம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். இச்சரித்திரம் திருக்காளத்திப் புராணத்திற் கூறப்பட்டது.
நாயகி நாயகனது பெயர் கேட்டவுடனே வசமழிதல் தலையன்பும், அவனைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவனைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். அவ்வாறே பக்குவமான்மா சிவனது பெயர் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பும், அவரைக் கண்டவுடன் வசமழிதல் இடையன்பும், அவரைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்புமாம். நாயகனது பெயர் கேட்டவுடன் வசமழியும் தலையன்பையுடைய நாயகிக்கு, அக்கேட்டலோடு காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளரும் அன்பின் பெருக்கம் இத்துணைத்தென்று கூறுதல் கூடாதன்றோ! அது போலவே! "இந்தச் - சேணுயர் திருக்காளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே - கோணமில் குடுமித்தேவ ரிருப்பர்கும் பிடலாம்" என்று நாணன் கூறினமை கேட்டவுடன் வசமழிந்த தலையன்பையுடைய இந்நாயனாருக்கு, அக்கேட்டலோடு சிவலிங்கப் பெருமானைக் காண்டல் கூடல்களும் நிகழ்ந்தவழி, முறுகி வளர்ந்த அதிதீவிரமாகிய அன்பின் பெருக்கத்தை இத்துணைத்தென்று கூறுதல் கூடாது.
இவர் சிவனது சட்சுதீக்ஷையினாலே பசுத்துவம் நீங்கி, சிவத்துவம் பெற்றார். அது இங்கே "திங்கள்சேர்சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே - யங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித் - தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் - பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவமானார்." என்பதனாலும் "முன்புதிருக் காளத்தி முதல்வனா ரருணோக்கி - னின்புறுவே தகத்திரும்பு பொன்னானாற் போல் யாக்கைத் - தன்பரிகம் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற - வன்புபிழம் பாய்த்திரிவா ரவர்கருத்தினளவினரோ" என்பதனாலும் உணர்த்தப்பட்டது.
பத்தியானது மந்தகரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்படும். அரக்கானது வெய்யிலின் முன் இருந்து வெதும்புதல் போல்வது மந்ததரபத்தி. மெழுகானது வெய்யிலுக்கு எதிர்ப்படின் உருகுதல் போல்வது மந்தபத்தி. நெய்யானது சூட்டுக்கு இளகுதல் போல்வது தீவிரபத்தி. தைலதாரையானது சிறிதும் இடையறாது ஒழுகுதல் போல்வது தீவிரதரபத்தி. இந்நாயனாரது பத்தி தீவிரதரமேயாம் என்பது சிவலிங்கப்பெருமானைக் கண்டவுடனே நிகழ்ந்த இவர் செயல்களாலே தெளியப்படும். அச்செயல்கள் "மாகமார் திருக்கா ளத்தி மலையெழு கொழுந்தா யுள்ள - வேகநா யகரைக் கண்டா ரெழுந்தபேருவகை யன்பின் - வேகமா னது மேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடு - மோகமா யோடிச் சென்றார் தழுவினார் மோந்து நின்றார்" "நெடிதுபோ துயிர்த்து நின்று நிறைந்தெழு மயிர்க்கா றோறும் - வடிவெலாம் புளகம் பொங்க மலர்க்கணீ ரருவி பாய - வடியனேற் கிவர்தா மிங்கே யகப் பட்டா ரச்சோ வென்று - படியிலாப் பரிவு தானோர் படிவமாம் பரிசு தோன்ற" என்னும் திருவிருத்தங்களால் உணர்க.
இந்நாயனார் சுவாமியைக் கண்டவழி வணங்குதல் பயின்றறியாத வராதலானும், தாய் தந்தையர் தங்களுக்கு இனிய பிள்ளையைக் கண்டவுடன் பேராசையினால் மிக விரைந்து ஓடிப் போய், தழுவி மோத்தல் உலகியற்கை ஆதலானும், தமக்கு இனியராகிய சுவாமியைக் கண்டவுடனே அதிமோகமாய் விரைந்து ஓடிச் சென்று தழுவி மோந்தார் என்க. இவர் தம்மினும் சிவனே தமக்கு இனியராக அது பற்றியெழுந்து முறுகி வளர்ந்த அன்பே வடிவமாயினார். அது, இவர் திருக்காளத்தி மலையை அணுகுமுன் பெரும்பசியால் வருத்தமுற்றும், சிவலிங்கப்பெருமானைக் கண்டபின் இவருக்கு அவ்வருத்தமென்பது சிறிதாயினும் தோன்றாமையானும், சிவபெருமான் துட்ட மிருகங்கள் திரியும் காட்டிலே தனித்திருத்தலால் அவரைத் தாம் பிரியமாட்டாமையையும், அவருக்கு அமுது செய்ய இறைச்சி இன்மையால் அதன் பொருட்டுத் தாம் பிரிதல் வேண்டினமையையும், குறித்து இவருக்கு எழுந்த பதைப்பு மிகுதியினாலும் தெளிக.
அப்பதைப்பும் அதனால் நிகழ்ந்த செயல்களும் இங்கே "வெம்மறக் குலத்து வந்த" என்பது முதல் "முன்புநின் றரிதினீங்கி" என்பது இறுதியாய் உள்ள எட்டுத் திருவித்தங்களாலும் உணர்த்தப்பட்டன. இன்னும், இவர் சிவபெருமானைக் கண்ட நாள் முதல் ஆறு நாளும் பசி நித்திரை யென்பன இவருக்குச் சிறிதும் தோன்றாமையானும், காடன் தம்மோடு பேசினமையும், அவனும் நாணனும் தம்மை விட்டு போயினமையும், தந்தையாகிய நாகன் முதலியோர் வந்து தம்மோடு பேசினமையும், தம்மைப் பிரிந்தமையும் பிறவும் இவருக்குச் சிறிதும் விளங்காமையானும், இவர் இடையறாது ஒழுகும் தைலதாரைபோல ஆவியோடாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகும் அன்புருவமே ஆயினார் என்பது ஐயம் திரிபு அற உணரப்படும்.
சிவன் உவப்பன செய்தலும் வெறுப்பன ஒழிதலும் அவரிடத்து அன்புடைமைக்கு அடையாளம் என்றீர். சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் சுவாமிக்கு யாகத்திலன்றிப் பிறவழியில் மாமிசம் நிவேதித்தலும், வாயிற் கொண்டு வரும் நீரால் அபிஷேகம் செய்தலும், காற்செருப்பினாலே திருமுடியில் நிருமாலியம் கழித்தலும், தலையிற் சூட்டிய பூக்களைச் சாத்தலும் ஆகிய இவைகள் நினைப்பினும் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய நரகத் துன்பம் பயக்குமன்றோ? அங்ஙனமாக, இவர் இவற்றைச் செய்தமை என்னையெனின், இவர் இப்பிறப்பில் ஓர் ஆசாரியரை அடைந்து, இது புண்ணியம் இது பாவம் இது செயற்பாலது இது ஒழிதற்பாலது என்று ஒருகாலும் கேட்டும் அறிந்தவர் அல்லர். முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியினாலே தாம் சிவலிங்கப் பெருமானைத் தரிசித்த பொழுது திருமுடியிலே நீர் வார்த்து மலர் இட்டு இருத்தல் கண்டமையானும், ஒரு பார்ப்பான் யாதையோ கொண்டு வந்து ஊட்டினான் என்று கேட்டமையானும், அவர் மாட்டு முறுகி வளர்ந்த அன்பினாலே இவையே சுவாமிக்கு உவப்பாவன என்று துணிந்து, அவ்வாறு செய்ய நினைந்து, தமக்கு முன் இனியதாய் உள்ளது மாமிசமே ஆதலால் அதுவே சவாமிக்கும் இனியதாம் என்று மாமிசத்தை வாயில் அதுக்கிச் சுவை பார்த்து இனியனவற்றைப் படைத்தலும், பாத்திரம் இன்மையால் அபிஷேகத்திற்கு ஜலம் வாயில் எடுத்துக் கொள்ளுதலும், ஒரு கையில் தேனொடு கலந்த மாமிசம் பொருந்திய கல்லையும் மற்றக் கையில் அம்புவில்லும் இருத்தலால் புஷ்பங்களைத் தலையில் வைத்தலும், திருமுடியில் நிருமாலியத்தைக் காற்செருப்பினால் கழித்தலும் செய்தனர். இன்னும், தாம் மாமிசம் உண்டல் போலச் சுவாமியும் உண்பரென்று நினைத்து "கொழுவிய தசைகளெல்லாங் கோலினிற் றெரிந்து கோத்தங் - கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் பழகிய வினிமை பார்த்துப் படைத்தலில் விறைச்சி சால - வழகிது நாய னீரே யமுதுசெய் தருளும்" என்று வேண்டிக்கோடலும், சிவன் முடிவில்லாத ஆற்றலுடையவரென்பது நோக்காமல், 'நீர் துணையின்றித் தனித்து இருக்கின்றீரே' என்று நித்திரை இன்றி இரா முழுதும் எதிர் நின்று காத்தலும் செய்தனர். இவையெல்லாம் முற்பிறப்பிற் செய்த சிவபுண்ணிய மிகுதியால் சிவன்மாட்டு எழுந்து இடையறாது மேன்மேலும் முறுகி வளர்ந்த அன்பின் பெருக்கத்தினாலே செய்யப்பட்டமையால், அவருக்கு மிக உவப்பாயின. இது சிவகோசரியாருக்குச் சிவன் திருவாய்மலர்ந்தருளிய பொருளையுடைய, "அவனுடைய வடிவெல்லாம்" என்பது முதல் "உனக்கவன்றன் செயல்காட்ட" என்பது இறுதியாய் உள்ள ஏழு திருவிருத்தங்களாலும் உணர்க. "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் - செருப瘃புற்ற சீரடி வாய்க்கலச மூனமுதம் - விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தல் - கருட்பெற்று நின்றவா தோணோக்க மாடாமோ" என்னும் திருவாசகத்தானும் காண்க. பேய்பிடியுண்டாரது செயலெல்லாம் பேயின் செயலாதல்போல, பசுபோதம் அற்றுச் சிவபோதம் உற்ற இந்நாயனாரது செயலெல்லாம் சிவன் செயலேயாம் என்பது தெளிக.
சிவலிங்கப்பெருமானது திருக்கண்ணில் உதிரநீர் பாயக் கண்டபொழுது இந்நாயனாருக்கு உண்டாகிய பதைப்பு மிகுதியும், தமது கண்ணைத் தாமே இடக்கும்போதும் இவருக்குச் சிறிதாயினும் வருத்தம் தோன்றாமையும், அக்கண்ணைச் சிவனுடைய கண்ணில் அப்பினவுடனே உதிரநீர் நிற்கக் கண்டமையால் எழுந்த ஆனந்த மிகுதியும், சிவனது மற்றக் கண்ணிலும் உதிரநீர் பாயக் கண்டு தமது மற்றக் கண்ணை இடக்கும் போதும் சுவாமி கண்ணில் உதிரநீர் நிற்கும் என்னும் துணிவினாற் பிறந்த விருப்பமும், இவருக்குச் சிவன்மாட்டுள்ள அன்பே இன்பமாம் என்பதைத் தெளிவுற விளக்குகின்றன. அன்பே இன்பம் என்பது "அன்பினா லடியே னாவியோ டாக்கை, யானந்த மாய்க்கசிந் துருக" என்று திருவாசகத்திலும், "முடிவிலா வின்பமான வன்பினை யெடுத்துக் காட்ட" என்று இப்புராணத்தினும், "இறவாத வின்ப வன்பு வேண்டி" என்று காரைக்காலம்மையார் புராணத்திலும், கூறுமாற்றானும் அனுபவத்தானும் உணர்க.
இந்நாயனாரது உயர்வொப்பில்லாத பேரன்பை, எம்போலிகளும் உணர்ந்து தம்மாட்டன்பு செய்து உய்தற் பொருட்டு, சிவகோசரியாருக்கு வெளிப்படுத்தப் புகுந்த பரம கருணாநிதியாகிய சிவன், இவர் தமது மற்றக் கண்ணையும் இடக்கும் பொருட்டு அம்பை ஊன்றும்போது, தரிக்க லாற்றாதவராகிய, தமது வியத்திஸ்தானமாகிய இலிங்கத் திற்றோன்றிய திருக்கையினாலே இவர் கையை அம்போடும் பிடித்துக்கொண்டு, "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப வென் னன்புடைத்தோன்ற னில்லு கண்ணப்ப" என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனால் இந்நாயனாரது அன்பிற்கும், சிவனது திருவருட்கும் உயர்வொப்பின்மை தெளிக. இவ்வாறு மும்முறை அருளிச்செய்தார் என்பது நக்கிரதேவர் அருளிச்செய்த கண்ணப்பதேவர் திருமறத்தில் "மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தது - நில்லு கண்ணப்ப நில்லுகண் ணப்பவென் - னன்புடைத் தோன்ற னில்லுகண் ணப்பவென் - றின்னுரையதனொடு மெழிற் சிவலிங்கந் - தன்னிடைப் பிறந்த தடமலர்க்கையா - லன்னவன் றன்கை யம்பொடு மகப்படப் பிடித் - தருளினன்" என்பதனாலும், இங்கே "மூன்றடுக்கு - நாக கங்கண ரமுதவாக்குக் கண்ணப்ப நிற்க வென்ற" எனக் கூறியவாற்றாலும், உணர்க.
இதுகாறுங் கூறியவாற்றால், சிவன்மாட்டுள்ள அன்பே பேரின்பம் என்பதும், அவ்வன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பில்லாதவர் இக்கண்ணப்பநாயனாரே யென்பதும், செவ்விதிற்றுணியப்படும்.
அது "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபி - னென்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி - வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் - சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ" என்று திருவாசகத்தும், "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் - கண்ணப்ப னொப்பதோ ரன்பதனைக் - கண்ணப்பர் - தாமறிதல் காளத்தியாரறித லல்லதுமற் - றாரறிவு மன்பன் றது" என்று திருக்களிற்றுப்படியாரினும், கூறுமாற்றானும் தெளிக.
திருச்சிற்றம்பலம்